
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முக்காணியைச் சேர்ந்தவர் பொங்கல்ராஜ். இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பொங்கல்ராஜ், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பல சரக்கு கடை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு இவர் 11.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு கிளம்பியவர் வீட்டுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில், அவரது மகன் சக்திவேல், தனது தந்தையை தேடி முத்தையாபுரம் கடைக்கு வந்து தேடினார். அவரை கண்டுபிடிக்க முடியாதால் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு மதிக்கட்டான் ஓடை பாலத்தின் கீழ் ஒரு பைக் கிடப்பதாகவும் அதன் அருகில் ரத்தக் கரை இருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
மதிக்கெட்டான் ஓடை தண்ணீரில் பொங்கல்ராஜ் கல்லால் தாக்கப்பட்டு ரத்தக் காயத்துடன் பிணமாக கிடந்தார். போலீஸாரின் விசாரணையில் முக்காணியைச் சேர்ந்த புலமாடமுத்து, நாகராஜன், ஜெயராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பொங்கல்ராஜை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு உடலை ஓடைக்குள் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸாரிடம் பேசினோம், ”ஆத்தூர் முக்காணி தாமிரபரணி ஆற்றின் கரையில் புலமாடசாமி சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலை கொலை செய்யப்பட்ட பொங்கல்ராஜ் தர்மகர்த்தாவாகவும், அவரது அண்ணன் நாராயணன் என்பவர் பூசாரியாகவும் இருந்து வந்துள்ளனர்.
கோயிலில் சாமியாடியாக ராஜேஷ் என்பவர் இருந்து வந்தார். ஆனால், கோயிலின் நிர்வாகமனாது சிவகுமார் என்பவரின் பொறுப்பில் இருந்து வந்தது. நாராயணன், சிவகுமார் ஆகியோர் முத்தையாபுரம் கிராமத்தில் வசித்து வந்ததால், முக்காணி கிராமத்தில் உள்ள அவருடைய சகோதரர் பொங்கல்ராஜ் கோயில் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கோயிலில் வளாகச் சுவருக்கு அருகில் தனது முன்னோர்களின் கல்லறை உள்ளது என்றும், கடந்த காலங்களில் சுமார் 4 தலைமுறைகளாக தன்னுடைய குடும்பத்தினரே பூஜை செய்து வருவதாலும் கோவில் தனது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் பாத்தியப்பட்டது என்றும் நாராயணன் கூறி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு புரட்டாசி மாதம் கோயில் கொடை விழா நடைபெற்று முடிந்தது. கொடை விழா முடிவற்றதும் கோயில் வரவு செலவுக் கணக்குகள் முறையாக காண்பிக்கப்படவில்லை என்று ஊர் தரப்பைச் சேர்ந்த மாசானமுத்து, புலமாடன், சங்கர் மற்றும் வரி செலுத்துபவர்கள் தரப்பினர் வரவு- செலவு கணக்கை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என பொங்கல்ராஜ் தரப்பினரிடம் கேட்டபோது, ”புலமாடசாமி கோயில் எங்களது குடும்பத்திற்கு பாத்தியப்பட்டது என்றும் யாருக்கும் கணக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியதன் பேரில் இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி நாராயணன் தரப்பினர் நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து இவ்வழக்கில் வழிபாடு செய்து பூஜை செய்ய நாராயணனுக்கு தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நாராயணன் மற்றும் பொங்கல்ராஜ் தரப்பினர் கோயிலில் பூஜை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இது மாசானமுத்து தரப்பினருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக முன்விரோத்தில் கொலை நடந்துள்ளது. இக்கொலை வழக்கில் புலமாடன், நாகராஜன், ஜெயராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர். இந்த கொலைச் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.