• May 10, 2025
  • NewsEditor
  • 0

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சமீபத்தில் நடத்திய நேர்காணல் ஒன்றில், பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் மறுப்பது குறித்து அந்நாட்டு தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தராரிடம் கேள்வி எழுப்பினார்.

yalda hakim

“பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக கூறியதை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதற்கு நேர்மாறாகக் கூறியதை அவருக்கு ஹக்கீம் நினைவூட்டினார்.

“எனது பேட்டியில், ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், பாகிஸ்தான் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்தல், ஆதரவளித்தல் மற்றும் பிரதிநிதிகளாகப் பயன்படுத்துதல் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டலாமா?” என்று ஹக்கீம் மேற்கோள் காட்டி கூறினார்.

முந்தைய நேர்காணல் ஒன்றில், ஹக்கீமிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆசீப், “நாங்கள் சுமார் மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவுக்காக இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்… அது ஒரு தவறு, அதற்காக நாங்கள் துன்பங்களை அனுபவித்தோம்” என்று ஒப்புக்கொண்டார்.

“2018-ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக கூறி ராணுவ உதவியை நிறுத்தினார். எனவே பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று நீங்கள் கூறுவது, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியதற்கும், பெனாசிர் பூட்டோ கூறியதற்கும், உங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறியதற்கும் நேர் எதிராக இருக்கிறது” என்று தராரிடம் ஹக்கீம் கூறினார்.

yalda hakim
yalda hakim

இந்த நேர்காணல்களின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் யால்டா ஹக்கீமை பாராட்டி வருகின்றனர்.

யால்டா ஹக்கீம் – யார் இவர்?

யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானின் காபூலில் பிறந்தவர். அவர் குழந்தையாக இருந்தபோது அவர்களது குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது. தற்போது, ​​ஸ்கை நியூஸ் சேனலில் ‘தி வேர்ல்ட் வித் யால்டா ஹக்கீம்’ என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குகிறார்.

முன்னதாக பிபிசி நிறுவனத்தில் முன்னணி தொகுப்பாளராக பணியாற்றினார். காசா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவர் நேரடி செய்திகளை வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடக அமைதி விருது

2009-ம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலிய தொலைக்காட்சி செய்தி தொகுப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரேலிய ஊடக அமைதி விருதை அவர் பெற்றார். மேலும், வாக்லி இளம் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் விருதுக்கான இறுதிப் போட்டியாளராகவும் இருந்துள்ளார்.

யால்டா ஹக்கீம் அறக்கட்டளை என்ற பெயரில், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவியையும் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் முன்னேற்றத்துக்காக அவரது இந்த அறக்கட்டளை பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *