• May 10, 2025
  • NewsEditor
  • 0

தற்போது நிலவி வரும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் குறித்து இந்திய மக்களிடம் விளக்க, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.அதில் இந்தியாவின் முன்னெடுப்புகள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதல்கள் குறித்து வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவக் கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கினர்.

எதிர்வினை மட்டுமே..!

முதலில் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது…

“நான் முன்னரே பலமுறை கூறியுள்ளேன். இந்தப் பதற்றத்திற்கும், தூண்டுதல்களுக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளே காரணம். பதிலுக்குத் தான் இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது… எதிர்வினையாற்றியுள்ளது.

இன்று காலை முதல் பாகிஸ்தான் பல தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைப் பார்த்தோம்.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தியாளர் சந்திப்பு

இந்தியா மீது தாங்கள் தொடுத்த பதிலடித் தாக்குதல் என்று பாகிஸ்தான் கூறிய அனைத்துமே பலத்த பொய்கள் மற்றும் போலியான தகவல்கள் ஆகும்.

இந்தப் பொய்கள் அனைத்தும் பாகிஸ்தான் அரசின் அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்பட்டவை ஆகும். சிர்சா, சுரத் வான்தளம் அழிப்பு, ராணுவத் தளவாடங்கள் அழிப்பு, உதம்பூரில் உள்ள எஸ்-400 அழிக்கப்பட்டது, இந்தியாவின் சைபர் கட்டமைப்புகள் அழிப்பு என அவர்கள் கூறுவது அனைத்துமே பொய்.

பாகிஸ்தான் முன்னெடுக்கும் இந்தத் தவறான தகவல்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள மக்கள் மற்றும் மக்கள் வாழும் இடங்களைக் குறிவைப்பதாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் மூலம் கிளர்ச்சியை உருவாக்க முயல்கிறார்கள்.

பிரிவினையை உருவாக்க முயல்வது…

இன்று காலை ராஜோரி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் அந்த மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ் குமார் தாப்பா உயிரிழந்துள்ளார். ஃபிரோஸ்பூர் மற்றும் ஜலந்தரில் மக்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அதிகாரிகள், அமிருதசரஸ் பகுதியில் ஏவுகணைகளை இந்தியா ஏவி வருவதாகப் பேசி வருகிறார்கள். இப்படி அவர்கள் பிரிவினையை உருவாக்க முயல்வது தோல்வியில் தான் முடியும்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தொலைக்காட்சியில் பேசும்போது, இந்திய மக்கள் இந்திய அரசைப் பல்வேறு விஷயங்களில் விமர்சிக்கிறார்கள் என்று மகிழ்ச்சி கொள்வதைப் பார்த்தோம்.

இப்படி மக்கள் தங்களது அரசை விமர்சிப்பதைப் பார்ப்பது பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். இது தான் ஜனநாயகத்தின் அடையாளம். அதைக் குறித்து அவர்களுக்கு தெரியாது.

ஆப்கானிஸ்தானை இந்திய ஏவுகணை தாக்கியது என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். ஆனால், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த நாடு அவர்களின் மக்களுக்கும், அவர்களது கட்டமைப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்பதை நினைவுபடுத்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன்,” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *