இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந்துள்ளது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை சைரன்களை ஒலித்து, வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது. தீவிரமான பீரங்கி தாக்குதலாக இருக்கலாம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “ஜம்மு காஷ்மீரைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வேண்டுகோள், தயவு செய்து தெருக்களில் இருந்து தள்ளியிருங்கள்.

அடுத்த சில மணிநேரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள் அல்லது அருகிலுள்ள நீங்கள் வசதியாக தங்கக்கூடிய இடத்தில் இருங்கள். 

வதந்திகளை நம்பாதீர்கள். ஆதாரமற்ற மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்பாதீர்கள். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, நேற்றைய பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட முகாமை இன்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளிலும் பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலும் தீவிர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஜெய்சல்மார் உள்ளிட்ட எல்லையோர நகரங்கள் இருளச்செய்யப்பட்டுள்ளன என என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது.

ஜம்மு, சாம்பா, பதான்கோட் ஆகிய பகுதிகளில் ட்ரோன் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பூஞ்ச் நகரில் தீவிர பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆயுதப்படை மூத்த வீரர்கள் குழுவை சந்தித்து உரையாடியிருக்கிறார். பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்களை மாநிலத்துக்கு அழைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்பவர்கள், கல்வி சுற்றுலா சென்றவர்கள் என 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் அழைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *