
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
உங்களின் அயல்நாட்டுப் பயணம் சிறக்க வேண்டும். தங்கு தடையின்றி சென்று, சுற்றுலா அனுபவித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வர வேண்டும் என்றால் சில விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
முதலில் உங்களுடைய பாஸ்போர்ட். எத்தனை மாதங்கள் செல்லுபடியாக இருக்கின்றன, நீங்கள் செல்ல விழையும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டு பயணத்தைத் தொடருங்கள்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சில விசா பிரிவுகளின்படி நீங்கள் ஆறு மாதம் இருக்கலாம். ஆகவே, உங்கள் பாஸ்போர்ட், அந்த ஆறு மாதங்களுக்குள் காலாவதி ஆகாமல் இருக்க வேண்டும். காலாவதி ஆவதற்கு, ஆறு மாதங்கள் குறைவாக இருந்தால், உங்கள் அனுமதி மறுக்கப்படலாம்.
இதைப் போலவே, அந்த நாட்டின் அனுமதி விசாவும் குறைந்தது ஆறு மாதம் இருக்க வேண்டும். அதற்கு குறைந்தால், நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்.
நீங்கள் திரும்பி வருவதற்கான டிக்கட், பதிவு செய்து கையில் இருப்பது அவசியம். இன்றைய சூழ்நிலையில், திரும்பி வருவதற்கான டிக்கட் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.
நீங்கள் அன்னிய மண்ணில் தங்கி இருக்கும் காலங்களுக்கு, உடல்நலக் காப்பீடு கையுடன் எடுத்துச் செல்வது நல்லது. அதைப் போலவே, நீங்கள் வாழ்நாள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர் என்றால், நீங்கள் அயல்நாட்டில் இருக்கும் நாட்களுக்குத் தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.
கூடவே, உங்களுடைய மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துச்சீட்டு, மருந்துகள் வாங்கியதற்கான ரசீது ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் தங்கப் போகும் உங்கள் உறவினரின் பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவற்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வெளிநாடு செல்லும் போது, பல விமான நிறுவனங்கள் மூலம் பயணம் செய்வதாக இருந்தால், நீங்கள் பயணம் ஆரம்பிக்கும் விமான நிலையத்திலேயே, எல்லா பயணச் சீட்டுகளும் தரப்படுமா, உங்களது உடைமைகள் நீங்கள் கடைசியில் சேரும் இடத்திற்கு பதிவு செய்யப்படுமா என்பதை நன்கு விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
அப்படி நடக்காது என்று சிறிய சந்தேகம் வந்தாலும், அந்த விமானப் பயணத்தைத் தவிர்த்து, வேறு நிறுவனம் மூலம் செல்ல முயற்சி செய்யவும்.
ஒருமுறை, நானும் என் துணைவியாரும் கனடாவின் டொராண்டோ நகருக்குச் செல்வதற்கு “கத்தார் ஏர்வேஸ்” மூலமாகப் பயணச்சீட்டு எடுத்திருந்தோம்.. ஒரே மின்னணு பயணச்சீட்டில் சென்னை-தோஹா-கேட்விக்(லண்டன்)-டொராண்டோ என்று இருந்தது எங்கள் பயணச்சீட்டில்.
“கத்தார் ஏர்வேஸ்” இந்தியாவின் “இண்டிகோ ஏர்லைன்ஸ்” மற்றும் கனடாவின் “வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ்” ஆகியோருடன் “கோட் ஷேர்” என்ற வியாபாரத் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே எங்களது பயணம் சென்னை-தோஹா “இண்டிகோ ஏர்லைன்ஸ்”, தோஹா-கேட்விக் “கதார் ஏர்வேஸ்” கேட்விக்-டொராண்டோ “வெஸ்ட் ஜெட்” என்று பயணச்சீட்டு கொடுத்தார்கள்.
பயணச் சீட்டு வழங்கும் போது, சென்னையில் எங்களது உடைமை டொராண்டோவிற்கு பதிவு செய்யப்படும் என்றும், தோஹா, கேட்விக் விமான நிலையங்களில் வேறு விமானத்தில் ஏறுவதற்கான சீட்டு சென்னையிலே வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்.
லண்டன் விமான நிலையத்தில் இறங்குவதற்கு யு.கே.விசா தேவையில்லை என்றும் கூறினார்கள். ஆனால், எங்களுக்கு பயணச்சீட்டு லண்டன் வரை கொடுக்கப்பட்டது. எங்களது உடைமைகளும் லண்டன் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

லண்டனில் டொரோண்டோ விமானம் ஏறுவதற்கான அனுமதிச்சீட்டு வாங்குவதற்கும், லண்டனில் இறக்கி வைக்கப்பட்ட எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு, மறுபடியும் விமானத்தில் ஏற்றுவதற்கும், நாங்கள் வெளியே வருவதற்கு யு.கே விசா வேண்டும்.
எங்களுடன் சென்னையிலிருந்து வந்த பத்து நபர்களுக்கு இதே நிலை. எங்களிடம் விசா இல்லாத காரணத்தால் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
நாங்கள் சக்கர நாற்காலி உதவி கேட்டிருந்தோம். அந்த நபர் எங்களை உயரதிகாரியிடம் கூட்டிச் சென்றார். அவரிடம் பேசி, எங்கள் நிலையை விளக்கிய பின்பு எங்களுக்கு ஒரு நாள் விசா கொடுத்து உதவினார். தொலை தூரம் செல்வோர், பயணச் சீட்டு எடுக்கும் போது கவனத்துடன் கையாள்வது நல்லது.
நீங்கள் உங்கள் டிக்கட் பதிவு செய்யும் போது, உங்களுக்கு எந்த வகையான உணவு தேவை என்பதைச் சொல்லி விடுங்கள். ஏஷியன் வெஜிடேரியன், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் என்று உங்கள் தேவையைப் பதிவு செய்தால், உணவிற்குப் பிரச்சனை இருக்காது.
கைவசம் உணவு, பிஸ்கட், நொறுக்குத் தீனி எடுத்துச் செல்வது நல்லது. உங்களுக்கு விமானத்தில் கொடுக்கும் உணவு பிடிக்கவில்லை என்றால், உங்கள் கையிலுள்ள உணவு, பசி போக்க உதவும்.

ஒரு முறை, கனடாவிலிருந்து சென்னை திரும்பும் போது, பாரிஸில் சென்னை விமானத்தை தவற விட்டோம். தவறு எங்களுடையது இல்லை. எங்களுக்கு அடுத்த விமானம் ஏறுவதற்கு, பாரிஸ் விமான நிலையத்தில் 10 மணி நேரம் காக்க வேண்டி இருந்தது.
பல முறை சென்று எங்கள் நிலையைச் சொன்ன பின்பு தான், எங்களுக்கு சிற்றுண்டி சாப்பிட கூப்பன் கொடுத்தார்கள். ஆனால், கைவசம், சப்பாத்தி, பிஸ்கட் போன்றவை இருந்ததால், சமாளிக்க முடிந்தது.
நீங்கள் அறுபதைத் தாண்டியவர் என்றால், சக்கரநாற்காலி சேவைக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். தொலை தூர நகரம் செல்வோர், நடுவில் ஓரிரண்டு விமான நிலையங்களில் இறங்கி, மற்றுமொரு டெர்மினல் சென்று விமானம் ஏற வேண்டி இருக்கும்.

பன்னாட்டு விமான நிலையங்கள் அளவில் மிகப் பெரியவை. ஆகவே, ஒரு டெர்மினலிலிருந்து மற்றோரு டெர்னமில் செல்ல, விமான நிலையத்திற்குள் இருக்கும் ட்ரெயின் அல்லது விமான நிலையப் பேருந்து ஆகியவற்றில் செல்ல நேரிடும்.
இதை விசாரித்து தெரிந்து போவதற்கு நேரமாகலாம். நிறைய தூரம் நடக்க நேரிடலாம். சக்கர நாற்காலி சேவை எடுத்துக் கொண்டால், அவர்கள் நம்முடன் வந்து உதவி செய்வார்கள்.
நம்முடைய விமான நிலையங்களில், சக்கர நாற்காலி உதவிக்கு வருவோர் பணம் எதிர் பார்க்கிறார்கள். ஆனால், அயல் நாட்டு விமான நிலையங்களில் அவர்கள் எதுவும் கேட்பதில்லை. பிரியப்பட்டுக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். ஆகவே, கைவசம் அன்னிய செலாவணி சிறிது வைத்திருப்பது நல்லது.
சில விமான நிலையங்களில் சுங்கம் முடிந்து நம் உடைமைகளை எடுத்துக் கொண்டு செல்ல, ட்ராலி வண்டிகள் தேவைப்படலாம். டிராலிக்கான காசைப் போட்டு, அதனை எடுத்து வர வேண்டும். ஆகவே கைவசம் அமெரிக்கன் டாலர், கனடா டாலர் காசுகள் வைத்திருப்பது நல்லது.
மேலும், நீங்கள் செல்லும் நாட்டின் குடிவரவு அதிகாரியுடன், சாந்தமாகப் பேசுங்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் கோபப்படாமல். பொறுமையாகப் பேசி வேலையை முடித்துக் கொள்ளப் பாருங்கள். நினைவிருக்கட்டும், அதிகாரியை உங்கள் பேச்சால், செய்கையால் எரிச்சல் அடைய செய்தால், அவர், நாட்டில் நுழைவதற்கான அனுமதியை உங்களுக்கு மறுக்கக் கூடும்.
தற்போது பல நாடுகளில் புலம் பெயர்ந்து வருவோர் எண்ணிக்கையைக் குறைக்க முயலுகிறார்கள். தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் எல்லோரும் நிரந்தரமாகத் தங்குவதற்கு முயற்சி செய்வதாகக் கருதுகிறார்கள். நாம் நிரந்தரமாகத் தங்குவதற்கு வரவில்லை என்று அவர்கள் மனதில் பதியும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
–கே.என்.சுவாமிநாதன், சென்னை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.