
சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபர் பென்னி. இவரின் மனைவி எல்சி (57).
இவர்களின் மகன் எபின் (25). கடந்த 6.5.2025-ம் தேதி கணவனும் மகனும் வெளியில் சென்றுவிட எல்சி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை எல்சி திறந்திருக்கிறார். அப்போது மாஸ்க் அணிந்திருந்த இளைஞர் ஒருவர், வெளியில் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம், யார் நீங்கள், என்ன வேண்டும் என எல்சி கேட்க, அந்த இளைஞரோ எந்தப் பதிலும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த ஸ்பீரே ஒன்றை எடுத்து எல்சியின் முகத்தில் அடித்திருக்கிறார்.
இதில் எல்சி நிலைதடுமாறியதும் அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளைப் பறித்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த எல்சி, அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது மாஸ்க் அணிந்திருந்த இளைஞரின் உருவம் எல்சியின் மகனான எபினின் உருவத்தோடு ஒத்துப்போனது. இதையடுத்து எபின் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது.
அதனால் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கடன் தொல்லை காரணமாக அம்மாவின் செயினைப் பறித்ததை எபின் ஒப்புக் கொண்டார்.
பின்னர் 5 சவரன் தங்கச் செயினை போலீஸார் எபினிடமிருந்து மீட்டனர். விசாரணையில் எபின் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டபோது அதில் நஷ்டம் அடைந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க அம்மாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

பெற்ற மகன், தன்னிடம் செயினைப் பறித்த தகவலையறிந்த எல்சி அதிர்ச்சியடைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் தன் மகன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் எனக் காவல்துறையினரிடம் எல்சி கெஞ்சினார்.
அதனால் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள், சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs