உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு தாய்நாடு தமிழ்நாடு தான். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7.2 கோடிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக உள்ளனர். 2025ல் ஏறக்குறைய உலகம் முழுதும் சேர்த்து 9-10 கோடி தமிழ் மக்கள் இருக்கலாம். இந்தியாவிற்கு அப்பால், முக்கியமாக இலங்கை , மலேசியா , சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் கணிசமான தமிழ் மக்கள் வசித்துவருகிறார்கள்.

அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் இணைய அணுகல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் எண்ணிமப் புரட்சி(Digital revolution), குறிப்பிட்ட மொழி மற்றும் கலாச்சார குழுக்களை இலக்காகக் கொண்ட மொபைல் பயன்பாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் உள்ள தமிழ் சமூகம் பெருகிய முறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருப்பதால், தமிழ்-மையப்படுத்தப்பட்ட செல்பேசி பயன்பாடுகளுக்கு வளமான களம் உருவாகியுள்ளது.

தமிழ் மொழி

தமிழ்நாட்டில் கணிசமான திறன்பேசி பயனர்கள் உள்ளனர். 2021 ஆம் ஆண்டின் கிராமப்புற மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஸ்மார்ட்போன்களை வைத்திருந்ததாகக் குறிப்பிட்டாலும், அதிகரித்து வரும் எண்ணிமப் பயன்பாட்டினால் மேலும் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த இணைய பயன்பாடு 60% க்கும் அதிகமாக இருந்தது, மேலும் ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலமாக இருப்பதால், தமிழ்நாடு, குறிப்பாக நகர்ப்புறங்களில், ஒப்பிடக்கூடிய அல்லது அதிக ஸ்மார்ட்போன் மற்றும் இணைய பயன்பாட்டு விகிதத்தைக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் எண்ணிமச் சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. வணிகங்கள் பெருகிய முறையில் வலுவான ஆன்லைன் இருப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன, மேலும் எண்ணிமச் சந்தைப்படுத்தல் உத்திகள் நுகர்வோரை சென்றடைவதற்கு முக்கியமானதாகி வருகின்றன. இந்த வளர்ந்து வரும் டிஜிட்டல் சுற்றுச்சூழல் தமிழ்-மையப்படுத்தப்பட்ட செயலி பயன்பாடுகளின் வெற்றிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.

வாய்ப்புகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், டெவலப்பர்கள் சில சவால்களைக் கருத்தில் கொள்ள வேண்டும், உலக அளவில் பொதுவாகஅனைத்துத் தமிழர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் செயலிகள் என்றால் வெகு குறைவாக இருக்கிறது. உலக அளவில் தமிழர்கள் மென்பொருள் துறையில் சிறந்து விளங்கினாலும், அவர்களால் ஒரு சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற செயலிகளை இன்னமும் கொண்டு வரஇயலவில்லை என்பது அனைவரின் ஆதங்கம்.

ஆனாலும் தமிழ் செயலிகள் ஆரம்பித்தக் காலத்திலயே 10 லட்சம் நிறுவல்களை கொண்டச் செயலியாக ஓம் தமிழ் காலண்டர் செயலி விளங்கியது. இன்றும் உலகின் தமிழ் மக்கள் எங்கெல்லாம் வசிக்கின்றார்களோ அங்கெல்லாம் பொதுவாக பயன்படுத்தப்படும் செயலியில் ஒன்றாகவும் விளங்கிவருகிறது. இந்த வார ஸ்டார்ட்அப் சாகசம் தொடரில் ஓம் தமிழ் காலண்டர் செயலியின் நிறுவனர் நரேந்திரன் அவருடனான நேர்காணலைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

நரேந்திரன்

“ஓம் தமிழ் காலண்டர்’ app துவக்க எது காரணமாக இருந்தது, நீங்கள் ஆரம்பித்த காலக்கட்டத்தில் பல செயலிகளுக்கு தேவை இருந்தபோது குறிப்பாக ‘தமிழ்’ செயலியை தேர்ந்தெடுத்தது ஏன்? , அதிலும் குறிப்பாக ஏன் ஓம் தமிழ் காலண்டர்?”

“நமது தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள விஷயங்களை டிஜிட்டல் முறையில் எவ்வாறு எளிமையாக்க முடியும்? அவர்களது அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் பங்காற்ற முடியுமா? என்று யோசித்தோம். அந்த வகையில் தினசரி காலண்டர் என்பது ராசிபலன், நல்லநேரம், துவங்கி பல வகையில் மக்கள் பயன்படுத்துகிற ஒன்று என்பதால், இதை டிஜிட்டல் முறையில் வடிவமைக்க எண்ணினோம்.

அது மட்டுமல்லாமல், அக்கால பெரியவர்கள் பஞ்சாங்கம் பார்ப்பார்கள். நல்ல நாள், நல்ல நேரம் சொல்வார்கள், முக்கிய விழாக்களை முன்பே அறிவுறுத்துவார்கள். அதுபோன்ற பெரியவர்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள். அவர்கள் குறைந்தாலும் இதுபோன்ற பாரம்பரிய விசயங்களை ஏன் நாம் நவீனப்படுத்தக்கூடாது என்று யோசித்து எப்போதும் அழியாத வகையில் மீட்டெடுக்கும் விதமாகவும் துவங்கப்பட்டதே ‘ஓம் தமிழ் காலண்டர்’. அதுவே இன்று, ஏறக்குறைய 11 ஆண்டுகள், 50 லட்சத்தையும் கடந்த நிறுவல்கள் என மக்களின் பேராதரவால் தொடர்ந்து இயங்கி வருகிறது.”

`இதற்கான முதலீட்டை திரட்டியது எப்படி?’

“பெரும்பாலான மக்கள் தொழில் துவங்க முதலில் பணத்தை தான் திரட்டுவார்கள். எவ்வளவு பணம் திரட்ட முடியும். எவ்வளவு முதலீட்டை நம்மால் தாங்க முடியும். இப்படி கணக்கிட்டுவிட்டு அதற்கேற்ற தொழிலை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், நாங்கள் தமிழ் காலண்டர் துவங்குவதற்கான மொத்த விஷயங்களையும் ஆராய்ந்து விட்டு தான், பணத்தை நோக்கியே பயணித்தோம்.

செயலி ஆரம்பித்தது 2013ல். ஒவ்வொரு படியாக எடுத்து, நாங்கள் எடுத்து வைக்க வைக்க நண்பர்கள், உறவினர்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். இடையில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டது என்றாலும் சிறிய இடைவெளியிலேயே எல்லா கடன்களையும் எங்களால் அடைக்கவும் முடிந்தது. தொழில்துவங்கும்போது சிக்கல் வராமல் இருக்குமா என்ன?

“ஓம் தமிழ் காலண்டர் 10 லட்சத்தைக் கடக்கும் தருவாயில் எப்படி marketing செய்தீர்கள்.? ஒரு மில்லியன் நிறுவல் என்பதுதான் இன்று பல செயலிகளின் கனவு. அதை நீங்கள் கடந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?”

“ஓம் தமிழ் காலண்டர் துவங்கிய ஓராண்டிலேயே 5 லட்சம் பேர் நிறுவினர். அதிலிருந்து 10 லட்சத்தை எட்டும்போது நாங்கள் சந்தித்தது தொழில்நுட்ப சிக்கல் தான். ஏனெனில் 10 லட்சம் பேருக்கு மேல் வரும்போது சர்வர்கள் சற்று வலுவாக இருக்கவேண்டும். அதை நோக்கி நாங்கள் பயணிணத்தோம். இன்று வரை பல சவால்களையும் போட்டிகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எங்கள் ஓம் தமிழ் செயலியை ஆன்மிகம், ஜோதிடம், ஆரோக்கியம், நாட்குறிப்பு என பலதரப்பட்ட விஷயங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

உலக தமிழர்கள் எல்லோருமே பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பல வசதிகளை சேர்க்கும்படி உரிமையோடு கேட்டார்கள். அவர்கள் கேட்ட வசதிகளளை நாங்கள் கொடுக்கும்போது செயலி நிறுவல் அதிகமானது. அதன்பின் ஆன்மிக விளக்கங்கள், ஜோதிட ஆலோசனை, ஆன்மிகப் பொருட்கள் விற்பனை, இப்படி பலதரப்பட்ட விஷயங்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப இணைத்துக் கொண்டே வந்தோம். மக்களும் பெருமளவில் நிறுவி ஆதரவு தந்தார்கள். பயனாளர்களை திருப்திபடுத்தியதால் தான் பெருமளவில் மாற்றத்தைக் காண முடிந்தது.”

“ஓம் தமிழ் காலண்டர் 10 லட்சத்தைக் கடக்கும் தருவாயில் தொழில் நுட்ப அளவில், வருமான நிலையில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டீர்கள்?”

“நான் appஐ துவங்கிய காலத்தில், எங்களது செங்கல்பட்டு மாவட்டத்தில் பல மணி நேர மின்வெட்டு இருந்தது. அதனால் mobile சார்ஜ் செய்யவே சிரமமாக இருந்தது. இதனால் முக்கிய நகரங்களில் நிறுவனத்தை துவங்க எண்ணி சென்னை தி.நகரை தேர்ந்தெடுத்தேன். இதனால், நிர்வாகச் செலவுகள் அதிகமாகின. வேறு வழியில்லை. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற நண்பர் ஒருவர் படித்து முடித்த தருவாயில் என்னோடு இணைந்தார். இருவரும் சேர்ந்து துவங்கியதே ‘ஓம் தமிழ் காலண்டர்’.

வேறு நிறுவனங்களில் பணியாற்றிய நண்பர்கள் சிலர், அவர்களது பணிகளுக்கு மத்தியில் பகுதி நேரமாக எங்களுக்கு பணியாற்றித் தந்தார்கள். முழுநேரமாக பணியாளர்களை அமர்த்த அப்போது போதுமான வசதி இல்லை. ஆரம்பத்தில் சம்பளம் கொடுக்கவே போதுமான வருமானத்தை பார்க்கவில்லை. கடன் வாங்கித்தான் சம்பளம் கொடுத்தோம். வருமானம் பெருகிய சூழலில் கூட பல மாதங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு வெறும் கையேடு போன நாளும் உண்டு. ஆனாலும் முயற்சியை கைவிட வில்லை.

வருமானம் குறைவாக இருந்தாலும் தரமான சேவைகளையே வழங்க வேண்டும் என்ற உறுதியோடு இருந்தோம். இயற்கை மருத்துவம், தெய்வீகப் பாடல்கள், சொற்பொழிவுகள் என ஆரோக்கியம் நிறைந்த பல விஷயங்களை சேர்த்துக் கொண்டே இருந்தோம். ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்களும் பகுதி நேரமாக வந்து திறம்பட பணியாற்றினார்கள். அதனால் தான் பல லட்சம் பயனாளர்களின் ரசனைக்கு பங்கிட முடிந்தது.

பல தூண்கள் தாங்கி பிடிக்கும் மண்டபம் தான் ஓம் தமிழ் காலண்டர் என்றால் அது மிகையல்ல. நாங்கள் துவங்கி ஐந்து லட்சம் பேர் செயலியை பார்க்கும் தருவாயிலேயே நிறைய போட்டியாளர்கள் வந்து விட்டார்கள். பலரும் எங்கள் செயலியைப்போலவே உருவாக்கி காப்பி அடித்தனர். அப்போது சற்று வருத்தமாக இருந்தது. ஆனால் அதன்பின் அவர்கள் எங்களை பன்மடங்காக சிந்திக்க வைத்தார்கள். தளராது ஓடவும் வைத்தார்கள். எங்களைக் கடந்து முன்னிலையில் இருப்பவர்களும் உண்டு. தரமான செய்திகளை, நன்கு ஆய்வு செய்து மக்களுக்கு அளிக்க வேண்டும். நாமும் தளராது பயணிக்க வேண்டும் என்று நோக்கத்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இத்துறையில் யாரும் எதிரிகள் அல்ல, என்றுமே எங்களை வளர வைத்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் தான்.”

`StartUp’ சாகசம் 23 :

“ஓம் தமிழ் காலண்டர் பயணத்தில் மறக்க முடியாத தருணங்கள் என்றால் எதைச் சொல்வீர்கள்?”

“நாங்கள் தமிழ் காலண்டர் துவங்கிய காலகட்டத்தில், சம்பளம் கொடுக்கவெ தடுமாறிய அந்த சூழலில், எதையுமே எதிர்பாராது பகுதி நேரமாக பணியாற்றிய நபர்கள், பணியாற்றிய தருணங்கள் என்றுமே மறக்காது. மறக்கவும் கூடாது.”

“ஒரு தமிழ் app-ல் 50 லட்சத்திற்கும் மேல் பயனாளர்களைப் பெறுவது என்பது ஒரு மைல்கல் தான். இதை எப்படி பார்க்கிறீர்கள்? உங்களின் அடுத்த இலக்கு?”

“அதிகப்படியான மக்களுக்கு சென்று சேர்ந்தது என்பதை விட, நமது ஓம் தமிழ் காலண்டர் செயலி வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பயனைத் தந்தது என்றால் அதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி. உலகத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும் சென்று சேர வேண்டும். இதன் வாயிலாக ஒவ்வொருவருக்கும் பயன் தர வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தமிழ் சார்ந்த செயலியை உருவாக்குவது என்பது அரிது. ஆன்மிக செயலியை டிஜிட்டலில் தரம் மாறாமல் செய்வது அதை விட அரிது. லட்சக்கணக்கில் மக்களை பெறுவது அதைவிட அரிது. அதை பல ஆண்டுகள் வெற்றியோடு எடுத்துச் செல்வது அதைவிட அரிது. அதன் வாயிலாக வருமானத்தை ஈட்டுவது அதைவிட அரிது.

மேலும் தமிழுக்காக பல தரமான அனைவரும் பயன்படுத்தும் விதமான செயலிகளை உருவாக்கவண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறோம், இப்போது படைப்பாளர் நுண்ணறிவு மூலம் தமிழுக்கான சில மென்பொருட்களை உருவாக்கி வருகின்றோம்”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *