26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.

இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டது எனக் கூறியது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்கள், வான்வழி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்

அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி ராணுவ நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய நகரங்களையும், உள்கட்டமைப்பையும் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக தகர்த்தது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய ராணுவம் பொறுப்புணர்வுடன் முறியடித்தது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் மறுப்பது அவர்களது கபட வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

காஷ்மீர்

வழிபாட்டு தலங்களை தாக்க முயற்சி

இந்தியாவில் வழிபாட்டு தலங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. ஜம்மு- காஷ்மீரில் பூஞ்ச் பள்ளியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கட்டடம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பள்ளி மூடப்பட்டிருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

பூஞ்ச் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி தேவாலயத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பெற்றோர் காயமடைந்தனர். ஆனால் வழிபாட்டு தலங்களைத் தாக்கவில்லை என பாகிஸ்தான் பொய்ப் பிரசாரம் செய்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு

ஆபரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அமெரிக்காவுடன் பேசி வருகிறோம். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன.

கர்தார்பூர் சாஹிப் வழித்தடம்

கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

எல்லையில் பதற்றம் நிலவுவதால் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் தனது தவறுக்கு பொறுப்பு ஏற்காமல், அமிருதசரஸ் போன்ற நகரங்களை இந்தியாவே குறிவைத்து தாக்குவதாக நம் மீது குற்றம்சாட்டுகிறது. இதுபோன்ற பொய்களை பரப்புவதில் பாகிஸ்தான் கைதேர்ந்த நாடு என்பதற்கு வரலாறே சான்று. பாகிஸ்தானில் உள்ள நான்கமா சாஹிப் குருத்வாராவை இந்தியா தாக்க முயற்சிப்பதாக கூறுவது அப்பட்டமான பொய். மத மோதலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற கருத்துகளை பாகிஸ்தான் பரப்புகிறது” என மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துப் பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *