
மிதந்துகொண்டிருக்கும் நீர்க்குமிழைப் போல் நடந்துசெல்லும் ஒரு பெண் எழுதுவதற்கான காரணம் எதுவாக இருக்க முடியும்? அகத்தில் உள்ளதை எப்படியாவது எழுதிவிட வேண்டுமென்ற துடிப்புடன் எப்போதும் இருப்பது சாத்தியமா? வண்ணத்துப்பூச்சியை அழைக்கும் மலராக, காற்றுக்காகப் பாடும் பறவையாக அகத்தின் அணுக்கள் உறுத்திக்கொண்டே இருப்பதை எழுதியே தீரவேண்டும் என்ற உறுதியுடன் மொழிந்தவை கமலாதாஸின் படைப்புகள். இல்லாமையை, இயலாமையை ஓயாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே மலையாள இலக்கியத்தின் தேக்காகவும் பூவாகவும் விளங்கிய கவிக்குரல் கமலாதாஸினுடையது.
மலையாள உலகில் மாதவிக் குட்டி என்ற புனைப்பெயரில் பெண்ணியம் சார்ந்த கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் படைப்புகளை அதிகமாக எழுதியவர். இவரது கவிதைப் பக்கங்களைப் புரட்டினால் பெரும்பாலும் காதலும், காமமும் பிணைந்து பெண்மையின் பாடுபொருள்களை முழுமையாக யாசிக்கின்றன என்றே சொல்லவேண்டும். ஒரு பெண்ணிற்கான தனிமை என்பது காமம், காதல், திருமணம் கடந்தது என்றாலும் இளமரத்தினைத் தழுவி நிற்கும் பூங்கொடிபோல் தன்னுள்ளே ஊன்றி நிற்கும் அகச் சிந்தனைகளை அரவணைத்தவர்.
மரபார்ந்த செயற்பாடுகளை எதிர்த்தும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததோடு, காதலும் காமமும் அவரது மொழியினூடே பூட்டிய கதவிடுக்கில் கட்டிய சிலந்தி வலையைப் போல் பின்னிக்கிடக்கின்றன. மலபாரில் பிறந்த பெண்ணின் அகவுணர்களை, துயரங்களை, தனிமையை, அன்புக்காக ஏங்குவதை, தீராதக் காதல் வேட்கையை, பெண்ணின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக வெளிப்படுத்தியவர் கமலாதாஸ். சுயவிருப்பு, வெறுப்புகளை அகவய சித்திரிப்புகளாக்கி, எழுத்துக்கலையின் வழியாக எதையும் பேசமுடியும் என்பதை உறுதியாக நம்பியவர். அன்புக்காக ஏங்கும் பெண்களின் கதாபாத்திரங்களாகத் தன்னையே எழுதி தாகத்தைத் தீர்த்துக்கொண்டார்.
இவருக்குப் பதினாறு வயதில் திருமணமாகியது. தன்னைவிட வயதில் மூத்தவரான மாதவ்தாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவரோ பூக்கள் மொட்டவிழ்க்கும் வாசனையை நுகராமல் நகர்ந்துசெல்லும் காற்றைப் போல் அன்பையும் ஏக்கத்தையும் கண்டுகொள்ளாதவராக, கவனச் சிதைவுடன் பெண்மையை அடக்கியாள்பவராக இருந்திருக்கக்கூடும். அதனாலேயே இருவருக்குள்ளும் பெரிதாகச் சொல்லும்படியான காதலில்லை, திருமண வாழ்வு பொருந்தாமல் தள்ளி நின்றது. தூய்மையான அன்பைத் தேடித் தேடிக் களைத்துப்போகிறார் கமலாதாஸ். தன்னுடைய முதலிரவு கூட வன்புணர்வே என்கிறார். அன்பான கணவர்தான் என்றாலும் மனதிற்குள் பழங்கால மனிதர், குழப்பமான வலைகளைப் பின்னும் வயதான கொழுத்த சிலந்தி என்கிறார்.

தன்னையொரு கற்பறவையாகவும் கிரானைட்டாகவும் மாற்றுகிறார்கள், தன்னைச்சுற்றி இழிவானதொரு அறையை எழுப்புகிறார்கள், கொஞ்சமாவது கருணையோடு இருக்கலாமே இந்த வாழ்க்கை ஏன் குறுகியிருக்கிறது, காதல் ஏன் சிறுத்திருக்கிறது என்ற கேள்விகளை முன்வைக்கிறார். காதலுக்காக ஏங்கி, காதல் காதல் காதல் மீண்டும் மீண்டும் மீண்டும் என அவருடைய கவிதைகள் தீவிரத்தைக் கோடிட்டுக்காட்டி உரிமையைச் சின்னஞ்சிறு சிணுங்கள்களுடன் நிலைநாட்டுகின்றன.
ஒரு பெண் மனைவியாக மட்டுமே ஏன் இருக்கவேண்டும்? அவளுக்குள் உணர்வுகள் இருந்தாலும் அதைப் பற்றிச் சிந்திக்க நேரமும் அதைப் பற்றிய முழு அறிவும் அவளுக்கிருக்கிறது என்பதை இச்சமூகம் எப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது? தீண்டிப் பார்ப்பதும், சுரண்டுவதும், வலிகளை, வேதனைகளை அடக்குவதும் வெளியில் சொல்லத் தயங்குவதை அடக்கிவைக்கவுமே பெண்ணைப் பழக்கி வைத்திருக்கிறோம். அதனால் கமலாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஆணாதிக்கம் செலுத்தும் நிறுவனம். ஏமாற்றங்கள், இல்லாமையால் இருப்பதுபோல் தோன்றும் காதல், இருப்பைத் தக்கவைக்கும் காதல், காதல் தரும் வலிகள் என அவ்வளவையும் ‘என் கதை’ என்னும் சுயசரிதையில் இரவுக்குள் அமர்ந்துகொண்டு கடலுக்குள் தஞ்சமடைவதுபோல் வெளிப்படையாகவும் உண்மையாகவும் சொல்லிச்செல்கிறார்.
“நான் எல்லா ஆண்களையும் படித்தேன்”, “பெண்கள் திருமணத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் என்ன பெறுகிறார்கள்”, ஏன் ஒரு கணவருக்கு மேல் இல்லை”, “நான் அழகாகத்தானே வாழ்ந்தேன்”, போன்றவை வழக்கத்திற்கு மாறாகப் பதில் பேசமுடியாமல் கண்ணீருடன் நகர்ந்து செல்வதுபோல் கவிதைகளில் ஓசையின்றி நுழைகின்றன வாழ்வியல் கருத்துகள். நேர்மையான எண்ணங்கள் அவருக்குப் பெண்ணியக் கவிஞரென்றத் தோற்றத்தைத் தந்தாலும் கைகளைக் கழுவிக்கொண்டு கவிதையிலிருந்து வெளியேறும் மனத்தைப் போல் இந்தச் சிப்பி எப்போதும் திரும்பியே கிடந்திருக்கிறது.

‘கலவை என்ற கவிதையில் வரும் பெண் முதிர்ந்த மனோபாவத்தை வெளிப்படுத்துகிறாள். ஓர் ஆண், பெண்ணை அனுபவிப்பதோடு அவளை மறந்துவிடுகிறார், அவர்களுக்குள் உணர்வுப்பூர்வமான பந்தம் இல்லாமல் காதல் மறுக்கப்படுவதால் அவள் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுகிறாள். அவள் தன்னுடையை விதியை நொந்துகொண்டாலும், “எல்லோரையும் மன்னிக்கும் வயதை நான் அடைந்துவிட்டேன்” என்று சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. “அழைப்பு” என்ற கவிதையில், தன்னைக் கைவிட்ட காதலன் இல்லாத நிலையில் அப்பெண் இறக்கும் உணர்வையடைவதாகக் குறிப்பிடுகிறார். காதலில் நிறைவைக் காண்பதற்காக, திருமணத்திற்குப் புறம்பான உறவில் அன்பில்லாமல் வெறும் காம விளையாட்டின் மந்தமான, மகிழ்ச்சியற்ற உறவுகளுக்கு அப்பாற்பட்ட காதலை ராதாவின் கிருஷ்ணா அல்லது மீராவின் காதலுடன் ஒப்பிடுகிறார்.
‘ஜெய்சூர்யா’ கவிதையில் அன்பின் தீவிரத்தைக் காட்டுகிறார். ஒரு தாய் பிரசவ வலியால் அவதிப்படும் போதும் தன் குழந்தையைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அக்குழந்தை பிறந்த பரவசத்தில் அவளது பாலியல் சுரண்டலின் துன்பங்களைக் கூட மறந்துவிடுகிறாள். “பழைய விளையாட்டு இல்லம் மற்றும் பிற கவிதைகள்” என்ற தொகுப்பில் உள்ள பல கவிதைகள் ஆணாதிக்கத்திற்கான எதிர்ப்பைக் குறிக்கும் கவிதைகளாக இருக்கின்றன.
அதிகாரத்திற்கு எதிரான ஒட்டுமொத்த எதிர்ப்பே அவரது நிலை என்கிறது “தி ஃப்ரீக்ஸ்”. அன்பில்லாத காதலன், காதலுக்காக ஏங்கும் தீவிர அன்பின் சக்தியைக் கட்டவிழ்த்துவிடத் தவறியதாகச் சொல்கிறார். அன்பு என்பது மரத்திலிருந்து விழும் மஞ்சள் கொன்றைப் பூக்களாக நெஞ்சில் விழுவதுபோல் இதயத்தை அன்பால் நிரப்பும் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அவனோ அவளது மனத்தை ஒரு மலட்டுத் தன்மையுடன் பார்க்கிறான். தன் உள்ளார்ந்த மலட்டுத்தன்மையையும், வெற்றுப் பரவசத்தையும் மறைப்பதற்காக, தன்னைப் பெருமையாகக் காட்டுவது போலவும், வித்தியாசமாக நடந்துகொள்வது போலவும் நடிக்கிறார்கள், என்கிறார் கமலாதாஸ்.

மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்று “ஓர் அறிமுகம்”. இக்கவிதையில், கமலா தாஸ் திறந்த மனத்துடன் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட ஆசைகள், சுய விருப்பம் மற்றும் தேவைக்கான போராட்டங்களை விவரிக்கின்றார். இது ஒரு பெண்ணாக அவளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்க்கும் ஒரு முழுமையான கவிதையாகப் பார்க்கப்படுகிறது. இக்கவிதை அவரது தனித்துவத்தைக் குறிக்கும் கவிதையாக இருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுகளை விமர்சிக்கும் கவிதை.
பாவியும் நானே
புனிதமானவளும் நானே
காதலும் நானே
துரோகமும் நானே
என்னிடம் மகிழ்ச்சியில்லை அது உன்னுடையதல்ல
வலியுமில்லை அதுவும் உன்னுடையதல்ல
நான் என்னை
நான் என்றே அழைத்துக்கொள்கிறேன்.
இக்கவிதை அவரது காலத்தில் கரைந்துசெல்லாத உணர்வுகளை வெளிப்படுத்தியமையால் புகழ்பெற்றது, நிலவு தனது அழகினை அறியாமலிருப்பதுபோல் கண்களிலிருந்து பனிப்புகை எழுகையில் இருளில் புகுந்து நிசப்தமாய் இருக்கும் உலகில் மனிதர்களைத் தேடிச்செல்கிறார்.

இன்னும் சில முக்கியமான கவிதைகள் “என் பாட்டியின் வீடு,” “பழைய விளையாட்டு இல்லம்” , “திருநங்கைகளின் நடனம்”, அறுபத்தி ஆறில் என் அம்மா” போன்றவை. இவை ஆழ்மைய உணர்வுகள் மற்றும் தனிப்பட்ட துயரங்களைச் சொன்னாலும் இழந்தவற்றை எதனாலும் சரிசெய்யமுடியாது.
உன்னைக் காணும் வரை
கவிதை எழுதினேன்
படங்கள் வரைந்தேன்
நண்பர்களுடன் நடைபயணமென
வெளியில் சென்றேன்
இப்போது உன்னை நான் நேசிக்கிறேன்
ஒரு வயதான மங்கையைப் போல்
சுருண்டு கிடக்கிறது வாழ்க்கை
உன்னில் திருப்தி அடைகிறது
ஏதோவொரு வகையில் தன்னுடைய வாழ்விற்கான தீர்வைத் தேடிக் கண்டடைந்ததுபோல் இக்கவிதை தொனிக்கிறது.

பெரும்பாலும் காதலென்பது காமச் சங்கடங்களாய் அறைக்குள் முடங்கிப் போனாலும் காம உணர்வுகள் மீண்டும் மீண்டும் தீண்டிக்கொண்டே இருக்கின்றன.
ஆணின் காதலுக்காக ஏங்குபவள் இறுதியில் அது வெறும் காமமாகச் சிதைந்து போகும்போது ஏமாற்றமடைந்து விரக்தியடைகிறாள். காதல் என்பது இத்திருநங்கைகளின் நடனத்தைப் போலவே ஒரு கொடுமையாகத் அவரைச் சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அதுவே காதலின் மீதான விரக்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. இக்கவிதையைப் பதினைந்து வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன்,
திருநங்கைகள் வருவதற்கு முன்பே
அந்த இடம் சூடாக, மிகவும் சூடாக இருக்கிறது
அகலமான பாவாடைகள் சுழன்று சுழன்று நடனமாட,
கைத்தாளங்கள் மோதிக் கொள்கின்றன
கொலுசொலிகள் ஜில் ஜில் ஜில்லென்று ஒலிக்கின்றன
குல்மோகரின் அடியில் உமிழும் தீயின் அருகில்
நீண்ட சடைகள் பறக்கின்றன
கறுமையான கண்கள் மின்னுகின்றன
அவர்கள் நடனமாடினார்கள்
அவர்கள் நடனமாடினார்கள்
கால்களில் ரத்தம் வரும் வரை நடனமாடினார்கள்
போவதே தெரியாமல் கால்களில் ரத்தம் வரும் வரை ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் தீவிரம் நடன அசைவுகளில் வெளிப்படுகிறது. உடலின் சூட்டையும் மலட்டுத்தன்மையையும் குறிப்பதற்காகக் குல்மொஹருக்கு அடியில் அனல் பறக்கும் நெருப்பிற்கு அருகில் கூந்தலில் மல்லிகையை வைத்துக்கொண்டு பச்சைக் குத்திய கழுத்தோடு ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். இறந்து கொண்டிருக்கும் காதலர்கள், பிறக்காத குழந்தைகளின் துக்கமான பாடல்களைத் தங்களுடைய கட்டைக் குரல்களில் பாடுகிறார்கள்.

அவர்கள் எந்தவொரு பாலினத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. சிலர் டிரம்களை அடிக்க, சிலர் அவர்களின் மார்பகங்களில் அடித்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகம் காலியான பரவசத்தில் ஊடாடும் மலட்டு உலகம், சின்னஞ்சிறு தருணங்களையும் அதன் மீதான விரக்திகள், ஏமாற்றங்கள், நிறைவேறாமல் விடப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றை உதிர்த்தாடும் நடன அசைவுகளின் வழியாக வெறுமையும் ஆற்றாமையும் வெளியேறுகின்றன. கைகால்கள் மெல்லியதாகவும் உலர்ந்ததாகவும் இருக்கின்றன அதுவும் இறுதிச் சடங்குகளில் இருந்து பாதி எரிந்த மரக்கட்டைகளைப் போல, வறட்சியான கால்கள். தூசி, பல்லி மற்றும் எலிகளின் சிறுநீர் வாசனையுடன் மழை நீரும் கலந்து ஓடுகிறது என்கிறது கவிதை.
இந்திய இலக்கியத்தில் பெண்ணியக் கவிதைகளுக்கு முன்னோடியாகவும், பெண்ணியத்திற்கான எதிர் குரலாகவும் இன்றும் ஒலித்துக்கொண்டிருப்பது கமலாதாஸின் கவிதைகள். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர் எப்போதுமே குடும்ப உறவுக்கு எதிரானவராக இருந்ததில்லை என்றாலும் மரபு என்ற போர்வையில் பெண்ணின் மீது சாத்தப்பட்ட கம்பளியைத் தனது எழுத்துகளின் வழியாக எதிர்க்கவும், எள்ளி நகையாடவும் அவர் தயங்கவில்லை. கமலாவின் அம்மாவும் ஒரு கவிஞர் என்பதால் அவருக்கு இயல்பிலேயே கவிதைக்கான தளம் அமைந்திருக்கிறது.

சிறுகச் சிறுகக் காதலை உலரவைத்து, காமம் கடந்து இன்னும் வெதுவெதுப்பு அடங்காமல் நகரும் முகத்தில் மெலிதாக மலரத்துடிக்கும் மலராகக் கமலாதாஸைப் பார்க்கும் கண்ணாடி கவிதை.
ஓர் ஆணைத் தேடிப்பிடித்து
காதலிக்க வைப்பது எளிது
பெண்ணாக உனது தேவைகளுக்கு நேர்மையாக இரு.
அவனோடு கண்ணாடியின் முன் நிர்வாணமாக நில்
அவனால் தன்னை வலிமையானவனாக உணரமுடியும்
அதன்மூலம் நீ இன்னும் மென்மையாக,
இளமையாக, அன்பாக இருக்க முடியும்.
நீயும் உனது அன்பினை ஒப்புக்கொள்
அவனது கைகால்கள், கண்கள் சிவந்து போகட்டும்
குளியலறையின் தரையில் கூச்சத்துடன் நடந்துசெல்வதையும்
துண்டுகளைக் கீழே போடுவதையும்
அவன் சிறுநீர் கழிக்கும் விதத்தையும்
பரிபூரணமாகக் கவனித்துப்பார்
அன்பான விவரணைகள் அவனை ஆணாகவும்
உன்னுடையவனாகவும் காட்டிவிடும்
அவனுக்கு எல்லாவற்றையும் பரிசாகக் கொடு
நீண்ட கூந்தல், மார்பகங்களுக்கு இடையில் பூக்கும்
வியர்வைக்கிடையே கஸ்தூரி வாசனை
மாதவிடாய் ரத்தத்தின் இளஞ்சூடு
முடிவில்லாத பெண்ணின் பசியென
உன்னை பெண்ணாக உணரவைக்கும்
அத்தனையும் பரிசாகக் கொடு
ஓ.. ஆமாம்,
காதலிக்க ஓர் ஆணை பெறுவது எளிது,
ஆனால் அவன் இல்லாத வாழ்வை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
அவனில்லாமல் வாழும் வாழ்வை நோக்கி நகரும்போது
வெளிநபர்களைச் சந்திக்கும்போது
உனது கண்கள் தேடுவதை நிறுத்திவிடும்.
இறுதியாகக் கேட்ட அவனது குரல்
உன் பெயரைச் சொல்லி அழைப்பது
உன்னுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்
ஒரு காலத்தில் அவனது தொடுதலில்
பளபளப்பான பித்தளைபோல் பிரகாசித்த உடல்
இப்போது நலிந்து துவண்டுபோய் கிடக்கிறது.
– சொற்கள் மிதக்கும்