சசிக்குமார், சிம்ரன் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிம்ரன்.
சிம்ரனின் ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியிருந்தனர்.
அந்தக் காட்சியும் அப்போது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தன்னுடைய குழந்தைகள் பற்றி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் சிம்ரன்.
‘எப்போதும் உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறீர்களே’ என்ற கேள்விக்குப் பதிலளித்த சிம்ரன், “குழந்தைகளுக்கு ‘நோ’ சொல்வது கடினமான விஷயம்.
அவர்களைச் சமூக ஊடகங்களிலிருந்தும், தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் விஷயங்களிலிருந்தும் விலக்கி வைப்பது எளிதல்ல. நான் வரும் சவால்களை எதிர்கொள்கிறேன்.
ஒரு பிரபலமாக வாழ்வது எளிதான விஷயமல்ல. என் குடும்பத்தில் அனைவரும் திரைப்பட ஆர்வலர்கள்.
திரையரங்கத்திற்குச் செல்வது அல்லது ஒன்றாகத் திரைப்பட இரவுகளை அனுபவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
அது திகில் படமாக இருந்தாலும், நகைச்சுவை படமாக இருந்தாலும், ஒன்றாகச் சேர்ந்து பார்ப்போம். அவர்களுக்கு ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ மற்றும் ‘பிரியமானவளே’ போன்ற படங்கள் மிகவும் பிடிக்கும்.
மேலும், அவர்கள் அஜித் மற்றும் விஜய்யின் தீவிர ரசிகர்கள். அவர்களின் படங்களை அடிக்கடி பார்ப்பார்கள். ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’, மற்றும் ‘தி கோட்’ ஆகிய படங்களையும் அவர்கள் ரசித்தார்கள்,” என்றார்.

‘உங்களின் குழந்தைகள் திரைத்துறைக்கு வந்தால், அவர்களுக்குக் கொடுக்க விரும்பும் ஆலோசனை என்ன?’ என்ற கேள்விக்கு, “திரைப்படங்களில் இருப்பது ஒரு கடினமான வேலை. இது முழுக்க முழுக்க கடின உழைப்பைப் பற்றியது.
இதற்கு மாற்று எதுவுமில்லை. மக்களின் அதிர்ஷ்டம் பெரும்பாலும் பெரிய பங்கு வகிக்கிறது என்று கூறுவார்கள். நானும் அதை நம்புகிறேன். ஆனால், நல்ல குணம் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்று நினைக்கிறேன்.
வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்யும்போது, அவை இறுதியில் பலனளிக்கின்றன. என் தாயார் மிகவும் வலிமையான பெண்மணி.
அவரின் உறுதியான மனநிலை, எப்போதும் நான் விரும்பும் ஒன்று. அதை நிச்சயமாக என் குழந்தைகளுக்கு அளித்திருக்கிறேன்.
முதலில், நீங்கள் நடந்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார்.
சிம்ரன் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலானது. அது குறித்து அவர், “நீங்கள் மற்றவர்களிடம் கருணையாக இருக்கிறீர்கள்.
ஆனால், யாரோ ஒருவர் உங்களைத் தொடர்ந்து குறைத்து மதிப்பிட முயல்கிறார். நீங்கள் அதைப் புறக்கணிக்க முயல்கிறீர்கள் என்றால், ஒரு கட்டத்தில் அது பலவீனத்தின் அறிகுறியாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

எனவே, யாராவது ஒருவர் எல்லையைத் தாண்டும்போது, அதை அமைதியாக எதிர்கொள்வது முக்கியம்.
உங்களுக்காக நீங்கள் சரியாக இருக்க வேண்டும். மென்மையாக அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தைரியமாக இருங்கள்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…