
திருச்சி: “நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 இனிதான் லோடிங். 4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை படைத்தோம். இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும். ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்” என்று திருச்சியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் இன்று (மே 9) நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நேற்று பிளஸ் 2 முடிவுகள் வந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக விழுக்காடு மாணவர்கள் தேர்வு பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான். கல்வித் தரமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது. இடைநிற்றலே இருக்க கூடாது என்று பள்ளிக்கூடம் போகாமல் இருக்கின்ற மாணவர்களையும் வீடு வீடாக தேடிச் சென்று, அறிவுரை சொல்லி, வேண்டிய உதவிகள் செய்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறோம்.