பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞரான ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `முன்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கிறது. எனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் உடனடியாக செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டிருந்தார்.
உத்தரவிட முடியாது
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தபோது, “தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கிறதா இல்லையா என்பது ஒரு சிக்கலான பிரச்னை . அது அந்தந்த மாநிலங்களில் கொள்கை சார்ந்த விஷயம். இதில் எந்த ஒரு நீதிமன்றமும் நேரடியாக, `கட்டாயம் இந்த தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துங்கள்’ என உத்தரவிட முடியாது.
இந்த தேசிய கல்விக் கொள்கையை ஒரு மாநிலம் செயல்படுத்துவதன் மூலம் அல்லது செயல்படுத்தாமல் இருப்பதன் மூலம் ஏதேனும் அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்றால் நாங்கள் தலையிட முடியும். ஆனால் இந்த வழக்கில் அது போன்ற அம்சங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை விசாரிக்க முடியாது” எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஜி.எஸ் மணி, `தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் தமிழ்நாட்டில் இருந்தவரை தன்னால் இந்தி படிக்க முடியவில்லை. தன்னை படிக்க விடாமல் தடுத்தார்கள். தற்பொழுது நான் டெல்லியில் வசிக்கிறேன்’ என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இப்போது டெல்லியில் வசிக்கிறீர்கள் தானே இப்பொழுது தாராளமாக நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளலாமே” என சற்று கடுகடுப்புடன் கூறினர்.