வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

2025 மார்ச் மாதம் குடும்பத்தினருடன் சீனா சென்று வந்தோம்.

சீனா கிளம்புவதற்கு முன்பே அங்கே உள்ள உணவு நாம் சாப்பிட முடியாது. ஊறுகாய் புளியோதரைப் பொடி போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். திருட்டு பயம் அதிகம் உள்ளது. கவனமாக இருங்கள் என்று பல அறிவுரைகளை நண்பர்கள் வழங்கினார்கள். ஆனால் அங்கே நான் கண்ட சீனாவோ என்னை வியப்பில் ஆழ்த்தியது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஷாங்காய்(Shangai ) நகரை சென்றடைந்தோம். வானூர்தியில் இருந்து இறங்கியதுமே அனைவரும் கம்பளிச்சட்டை ( Sweater), மேலங்கி(Jacket) போட வேண்டி இருந்தது. அங்கே வெப்பநிலை 10° க்கும் குறைவு.

சீனர்களுக்கு சீன மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. எங்களை அழைத்துச் செல்ல வந்த வழிகாட்டி (Guide) ஆங்கிலம் நன்றாகப் பேசினார். நாங்கள் வாங்க போகலாம், போகலாம் என்று எங்களுக்குள் பேசியதை கேட்டவுடன் அவரும் போகலாம், போகலாம் என்று அழகான தமிழில் கூறி எங்களை உற்சாகப்படுத்தினார்.

ஷாங்காய், சீனாவிலும் உலக அளவிலும் மக்கள் தொகைப் படி மிகப்பெரிய நகரமாகும். இது சீனாவின் வணிகம் மற்றும் பொருளாதார தலைநகராகவும் விளங்குகிறது. 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சாங்காய் உலகின் மிகுந்த போக்குவரத்து மிக்க சரக்குகலன் துறைமுகமாகவும் விளங்குகிறது.

Shanghai
Shanghai

நாங்கள் முதலில் சென்றது 128 அடுக்கு மாடிகளைக் கொண்ட சாங்காய் டவர் (Shangai Tower). அதில் 118 வது மாடியில் தான் கண்காணிப்பகம் (observatory) இருக்கிறது. இது உலகிலேயே இரண்டாவது மிக உயரமான கட்டிடம் ஆகும். நகர் முழுவதும் 50, 60 அடுக்குமாடிகளைக் கொண்ட உயர உயரமான கட்டிடங்களை நூற்றுக்கணக்கில் பார்க்கும்போது நமக்கு மலைப்பாக உள்ளது.

நகரின் நடுவே குவான்பு (Huanpu) நதி ஓடுகிறது.இது சீனா மக்களால் உருவாக்கப்பட்ட நதி (Man made river). இதுதான் நகரின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதைத் தவிர போக்குவரத்துக்கும் சுற்றுலாவுக்கும் உதவுகிறது.

ஷாங்காய் நகர் முழுவதும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. தெருக்களில் ஆங்காங்கே மிதிவண்டியும் இரு சக்கர மோட்டார் வாகனங்களையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்த வாகனங்கள் பேட்டரியில் (Battery ) இயங்கக்கூடியது.

இந்த தெருக்களில் நிற்கும் இரு சக்கர வாகனங்களை யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். நகரின் பெரும்பாலான பகுதிகளில் 10 வழிச்சாலைகள் இருக்கிறது.

இதைத் தவிர இரு சக்கர வாகனங்களுக்காகவும் தனி வழி இருக்கிறது.ஷாங்காய் நகரின் மெட்ரோ (Metro) 19 வழிதடங்களைக் கொண்டு பூமிக்கடியில் 808 கிலோ மீட்டர் தொலைவு பரந்து விரிந்து அமைந்துள்ளது.

அங்கு சாப்பிட்ட உணவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நண்பகல், இரவு உணவு தென் இந்திய உணவகங்களில் சாப்பிட்டோம்.ஆகா! அருமை! நம்ம ஊர் கடைகளைக் காட்டிலும் சுவையான சாம்பார், ரசம் கிடைத்தது. அதைவிட மகிழ்ச்சி தந்தது அங்குள்ள தமிழ் பேசும் கடை மேலாளர்களைப் பார்த்தது தான்.

பிறகு வழிகாட்டி எங்களை பட்டு துணி தயாரிக்கும் நிறுவனம்,ஜேடு (Jade) என்ற மதிப்புமிக்க கல் தயாரிக்கும் நிறுவனம், முத்து விற்பனை கடை பல்வேறு சுவையான சீனத் தேநீர் கிடைக்கும் நிறுவனம் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்றார். இது ஒரு வகையான வியாபார உத்தி தான். நிறுவனங்களைச் சுற்றி பார்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த பொருட்களையும் வாங்கி விடுகிறோம்.

சாங்காய் நகரின் நடுவே ஓடிக் கொண்டிருக்கும் குவான்பு நதியில் படகு சவாரி செய்தோம். இரவு நேரத்தில் உயரமான கட்டிடங்கள் வண்ண வண்ண விளக்கொளியில் மின்னுகிறது. இரவு நேரத்தில் இந்திரலோகத்தில் இருப்பது போல் இருந்தது.

அடுத்து புல்லட் ரயிலில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்(Beijing ) சென்றோம்.1800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெய்ஜிங்கை ஆறு மணி நேரத்தில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் சென்றடைந்தோம். வழியில் பல்வேறு ஊர்களைப் பார்த்தோம்.

சிறு ஊர்களில் கூட 30, 40 அடுக்கு மாடி கட்டிடங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது.ஷாங்காயிலாவது வாட்ஸ் அப் (Whats app)செயலி கிடைத்தது. பெய்ஜிங் போனவுடன் சுத்தமாக கிடைக்கவில்லை. தலைநகரை அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கிறார்கள்.

சுற்றுலாத் தளங்களையும் பிற அனைத்து தெருக்களையுமே ஆட்கள் மாறி மாறி சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள். சீன மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

ஒருநாள் பொது இடத்தில் எங்களை மறந்து வடிவேல் சினிமா நகைச்சுவைகளைப் பற்றி பேசி சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தோம். அந்த இடத்தில் இருந்த ஒரு பெண்மணி எங்கள் வழிகாட்டியிடம் இது குறித்து விசாரிக்கவே நாங்கள் சத்தத்தை குறைத்துக் கொண்டோம். பொது இடங்களில் அவ்வளவு நாகரிகமாக நடந்து கொள்ளுகிறார்கள். சத்தம் போட்டு பேசுவது கூட இல்லை.

பல்வேறு இடங்களில் சீனர்கள் எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். மகிழ்ச்சியுடன் நாங்களும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பெய்ஜிங்கில் தியானமென் (Tienamen square)சதுக்கம் சென்றோம். இது பெய்ஜிங் நகரின் நடுப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த சதுக்கமாகும்.சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடமாக உள்ளது. சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச் சதுக்கத்தில் நடந்தன.

நாங்கள் ஞாயிற்றுக்கிழமை சென்றதால் இங்கு அதிக கூட்டம் இருந்தது.பின்பு சதுக்கத்தின் அருகில் இருந்த அரச அரண்மனைகளையும் அரண்மனை அருங்காட்சியகத்தையும் கண்டு களித்தோம்.

ஹுஹாய்(Huhai) ஏரியும் அதன் அருகில் உள்ள தெருக்களும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவு மிகக் குறுகலான தெருக்களாக இருந்தன. கழிவறை இல்லாத வீடுகளில் மக்கள் இங்கே நெருக்கமாக வாழுகிறார்கள்.100 மீட்டருக்கு ஒரு பொது கழிவறை இங்கு இருக்கிறது. அதுவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. அதாவது பழமையான சேரிப் பகுதி என்று சொல்லக்கூடிய இந்த இடங்களில் கூட தெருக்கள் சுத்தமாக இருந்தது.

பின்னர் கோடை அரண்மனை (Summer palace),ஹெவன் டெம்பிள் (Heaven temple) ஆகிய இடங்களைக் கண்டு களித்தோம். அடுத்து ஒலிம்பிக் வில்லேஜ் (Olympic village), 2022 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் நடந்த இடத்தை பார்த்தோம். எவ்வளவு தரமாக பிரம்மாண்டமாக கட்டமைத்துள்ளனர்!

ஷாங்காய், பெய்ஜிங் இரண்டு இடங்களிலும் அக்ரோபாடிக் (Acrobatic shows) கூத்துகள் பார்த்தோம். இதில் சீன மக்களை மிஞ்சுவதற்கு உலகில் வேறு ஒருவரும் இல்லை.

இளம் ஆண்களும் பெண்களும் உடலை வளைத்து பல்வேறு வித்தைகளைச் செய்து காண்பிக்கும் போது நமக்கு மலைப்பாக இருக்கிறது. இவ்வளவு திறமைகளை வளர்த்துக் கொண்டிருப்பதால் தான் ஒலிம்பிக் ஜிம்னாசியம் (Gymnasium) போட்டிகளில் சீனர்கள் அதிக பதக்கம் வெல்லுகிறார்கள்.

நாங்கள் சந்தித்த மேலைநாட்டினர் ஒரு சிலர் நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று விசாரித்தனர். இந்திய நாடு என்றால் ஒரு சிலருக்கு தெரியவில்லை!

நகரெங்கும் ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் இடையே எங்கு பார்த்தாலும் மரங்கள் வளர்ந்து இருக்கின்றன. செடிகள் இல்லாத இடமே இல்லை. செடிகள் அனைத்தும் அழகாக வெட்டப்பட்டு பார்ப்பதற்கே செம்மையாக, நேர்த்தியாக இருக்கிறது. கண்களைக் கவர்கிறது. சீனாவில் காற்று மாசு குறைவாக இருக்கிறது.ஏரி குளங்கள் எல்லாம் தூய்மையாக இருக்கிறது.

சீனப் பெருஞ்சுவர் (Great wall of China) குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் 6400 கிலோமீட்டர் தூரம் வளைந்த நெளிந்து செல்கிறது. மிக உயரமான படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால்தான் அதனை நன்றாக பார்க்க முடிகிறது.

இது மங்கோலியாவில் இருந்தும் மஞ்சூரியாவில் இருந்தும் வந்த சியோம்புகளின் படையெடுப்புகளில் இருந்து சீனப் பேரரசை காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். எவ்வளவு அகலமாக, உயரமாக, நீளமாக கட்டியுள்ளாரகள்!.

நாட்டைப் பாதுகாக்க அப்பப்பா! எவ்வளவு முயற்சி எடுத்துள்ளார்கள்! சீனப்பெருஞ்சுவரின் மீது நின்று புகைப்படம் எடுத்த போது பிறவி பயனை அடைந்து விட்டது போல் இருந்தது எங்களுக்கு!

நாங்கள் சுசூ (Sushou) என்று சொல்லக்கூடிய மிகப் பழமையான ஊரில் படகு சவாரி செய்து கொண்டிருந்தோம். அப்போது எங்கள் படகோட்டியின் கையுறை கழன்று தண்ணீரில் விழுந்து விட்டது. அருகில் மற்றொரு படகில் வந்து கொண்டிருந்த வேலையாட்கள் மறுநிமிடமே வலையை வைத்து தண்ணீரில் விழுந்த கையுறையை எடுத்து விட்டார்கள். அப்படகு தண்ணீரை சுத்தம் செய்வதற்காகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

சீனாவில் பொருட்கள் வாங்கும்போது கடைக்காரர்கள் கையில் கைக்கணி(Calculator) வைத்து அதில் விலையைக் காண்பிக்கிறார்கள்.

விலை குறைக்க வேண்டும் என்றால் நாங்களும் அக் கால்குலேட்டரிலேயே எழுதி காண்பிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலத்தில் எண்கள் கூட தெரியாத சீனர்கள் தான் இன்று பல்வேறு துறைகளில் வெளுத்து வாங்குகிறார்கள்.

சீனாவில் சினிமா அரங்குகள் மிக குறைவு. படிக்கும் குழந்தைகளுக்கு தனது தந்தை பணம் சம்பாதிக்க தன் இனிய உயிரை எப்படி பணயம் வைத்து வியர்வை சிந்துகிறார் என்பதை காணொளி மூலம் பள்ளி பருவத்திலேயே உணர வைக்கிறார்கள்.

விடுமுறை நாட்களில் யாருடைய தூண்டுதல் இல்லாமலேயே அம்மா தாத்தா பாட்டிகளுக்கு வயலில் உதவி செய்வது, சிக்கனத்தை கடைபிடிப்பது இவைகளை சிறு வயது முதலே பழகிவிடுகிறார்கள்.

நம் இந்திய ரூபாய்க்கு அங்கு மதிப்பில்லை. ஒரு யுவான்(Yuan) சுமார் 13 ரூபாயாக உள்ளது.

சீன மக்களின் ஒழுக்கத்தையும், சீன நாட்டின் வளர்ச்சியையும் அழகையும் கண்டு மனதிற்கு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்று அமெரிக்காவையும் ரஷ்யாவையும் பின்னுக்குத் தள்ளி உலக வல்லரசு என்ற பெயரை மிக விரைவில் சூடிக்கொள்ள இருக்கிறது சீனா. இது ஒட்டு மொத்த சீன மக்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

நன்றி.

Dr க. ஜெயபிரபா MD

மகப்பேறு மருத்துவர்

திண்டுக்கல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *