பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகும், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகும், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிக்கொண்டே இருக்கிறது.

ஆனால், மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களுக்குப் பிறகும், இந்திய பங்குச்சந்தையில் பெரியளவில் எந்த எதிரொலியும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் பங்குச்சந்தை பெரிய இடியைச் சந்தித்தது.

தற்போது இந்திய பங்குச்சந்தை சரிவில் தான் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையை எப்படிப் பார்க்கிறார்கள்?’ என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“நேற்று மதியம் சுமார் 2 மணி வரையில், சந்தை பெரிதாக எந்த ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. ஆனால், எல்லையில் பதற்றம் அதிகரித்ததும், சந்தையின் முடிவில் கிட்டத்தட்ட 150 புள்ளிகள் சரிந்தன.

தற்போது எல்லையில் தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இதனால், இன்று சந்தை சிறிய சரிவைச் சந்திக்கலாம். இது வழக்கமான ஒன்றுதான்.

நாளையும், நாளை மறுநாளும் சந்தை விடுமுறையாக உள்ளது. இப்போது இந்தியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால், இந்த இரண்டு நாள்களில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயத்தில், இன்று பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைக் கொஞ்சம் குறைப்பார்கள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று கூட கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி மதிப்பிற்கு மேலாகப் பங்குகளை வாங்கியிருக்கின்றனர். ஆனால், நேரடி முதலீட்டாளர்கள் ரூ.5,000 கோடி மதிப்பிற்கு மேலாகப் பங்குகளை விற்றிருக்கின்றனர்.

இதை வைத்துப் பார்த்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ‘இந்த சூழலை இந்தியா சமாளித்துவிடும்’ என்று நினைப்பது தெரிகிறது. இது ஒரு பாசிட்டிவான விஷயமாகும்”. என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *