
புதுடெல்லி: உத்தராகண்டில் யாத்ரீகர்களுடன் கங்கோத்ரிக்குச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதில் விமானி, ஐந்து யாத்ரீகர்கள் என ஆறு பேர் உயிரிழந்தனர்.
உத்தராகண்டின் டெஹராடூனில் இருந்து கங்கோத்ரிக்கு வியாழக்கிழமை காலை 6 யாத்ரீகர்களுடன் ஹெலிகாப்டர் கிளம்பத் தயாராக இருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஹெலிகாப்டர் பறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வானிலை எச்சரிக்கை அறிவுறுத்தலை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் காலை 9 மணியளவில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கனானி கிராமத்துக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளனாது. பின்பு அங்குள்ள பாகீரதி ஆற்றில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது.