
‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றித்தான் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. நம்முடைய காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு, சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற நம்நாட்டவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல், மறக்க முடியாதது… மன்னிக்கவும் முடியாதது. பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியப் படைகள் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதைத் தொடர்ந்து, ‘தக்க பதிலடி கொடுப்போம்’ என பாகிஸ்தான் தரப்பிலிருந்து கொக்கரிக்க ஆரம்பித்துள்ளனர். பாகிஸ்தானை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து மத்திய அரசு மற்றும் முப்படைகள் பலவாறாகத் திட்டங்களைத் தீட்டி, செயலாற்றியும் வருகின்றன.
இத்தகைய போர்ச்சூழல், பொருளாதாரரீதியில் என்ன மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் கவலையைக் கூட்டுகிறது. ஏற்கெனவே, பொருளாதார மந்தநிலை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டல், இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தை ஏற்ற, இறக்கமாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் போர்ப் பதற்றமும் இணைந்திருப்பது, கவலைக்குரிய விஷயமே!
‘இந்தியா-பாகிஸ்தான் இடையில் ராணுவ மோதல் தொடர்ந்தால், உலகம் தாங்காது’ என்று உலக நாடுகளின் அமைப்பான ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. சீனா, ஜப்பான், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் இதே கவலையைப் பகிர்ந்துள்ளன.
ஏற்கெனவே, இஸ்ரேல்-ஹாமஸ்; ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர்களும் பல்வேறு நாடுகளிடையேயான சிறுசிறு மோதல்களும் ஆண்டுக் கணக்கில் நீடிக்கின்றன. இந்நிலையில், இந்தியா போன்ற மிகப் பெரிய நாடும் போரில் குதித்தால்… அதன் விளைவுகள், உலக அளவில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் உலக நாடுகள் பலவற்றின் கவலைக்கும் காரணம்!
இதற்கிடையில், ‘நீண்ட காலமாக இரண்டு நாடுகளும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடந்திருக்கும் தாக்குதல்கள் அவமானகரமான நிகழ்வு. பிரச்னையைப் பேசித் தீர்ப்பதற்கு நான் உதவத் தயார்’ என்று தன் பாணியில் சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
பேச்சுவார்த்தையில் தீர்வு என்றால், கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்க வேண்டுமே? பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், இப்போதாவது உண்மையை உணர்ந்து தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட முன்வந்தால் ஒழிய, பிரச்னைக்கு வேறு தீர்வே இல்லை.
அதாவது, இந்தியா முன்னெடுத்திருக்கும் ‘தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை’ தீவிரவாதிகளுக்கு முடிவுகட்டுவதோடு முடிவுக்கு வந்துவிட்டால் பிரச்னையில்லை. மாறாக, இந்தியா-பாகிஸ்தான் போர் என்பதாக பரிணாமம் பெற்றால், அதன்காரணமாக உருவெடுக்கும் பொருளாதாரப் பேரழிவு… இரண்டு நாடுகளை மட்டுமல்ல, உலகத்தையே பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம்!
– ஆசிரியர்