
‘ஆபரேஷன் சிந்தூரில்' முக்கிய பங்கு வகித்த கர்னல் சோபியா குரேஷி நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தீர்ப்பின்போதே அவருக்கு உச்ச நீதிமன்றம் புகழாரம் சூட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2001-2002-ம் ஆண்டில் எல்லைப்பகுதியில் இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.
அப்போது ஆபரேஷன் பராக்கிரம் என்ற பெயரில் சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் பஞ்சாப் எல்லைப் பகுதியில் பணியாற்றிய சோபியா குரேஷி மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதற்காக அவருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப் படையில் மூத்த அதிகாரியாக அவர் பணியாற்றினார். வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள நிவாரண மீட்புப் பணிகளிலும் அவர் மிகச் சிறப்பாக சேவையாற்றினார்.