இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.

அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் காஷ்மீரிகள் தீரத்துடன் வெளிப்படுத்திய அக்கறையும் மனிதநேயமும் பயங்கரவாதத்திற்கு எதிரானவை. அமைதியிலும் நாட்டு ஒற்றுமையிலும் அக்கறையுடன் பெரும் பங்காற்றிவரும் காஷ்மீரிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக அவர்களை பயங்கரவாதிகளுடனும் பாகிஸ்தானுடனும் தொடர்புபடுத்தும் வெறுப்புக் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்.

பஹல்காம் தாக்குதல்

தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தைக் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே சுட்டுக் கொன்றதாகப் பொய்த்தகவலைப் பரப்பி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் சிலாது முயற்சியை முறியடித்துள்ள இந்திய மக்களின் அறிவுமுதிர்ச்சியான அணுகுமுறையை நாங்கள் மதிக்கிறோம்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகக் களையப்பட்டு இனியொரு பயங்காவாதச்செயல் இந்த மண்ணில் நிகழாது என்கிற நிலையை உறுதிப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஓர் இயங்கு தளமாக இருக்கக் கூடாது என்கிற இந்தியாவின் நிலைப்பாடு சமரசத்திற்கு அப்பாற்பட்டது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும் அவர்களுக்குப் பின்னேயுள்ள நாசகரச் சக்திகளையும் சர்வதேச சமூகத்தின் முன்னால் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தவும் தண்டிக்கவும் இந்தியாவுக்கு உரிமையுள்ளது.

அத்தகைய நிலையை உருவாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்தும் என்றும், சர்வதேச விசாரணைக்கு முன்வருவதாக பாகிஸ்தான் அறிவித்த நிலையில் அதையும் இந்தியா ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் 2025 மே 7ஆம் தேதி “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற நேரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ஒரு மதத்தவரின் பார்வையில் பெண்ணின் சுமங்கிலித்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படும் சிந்தூர் நெற்றித்திலகம் என்று பெயரிடப்பட்டதில் நாட்டின் மதச்சார்பற்ற, பாலினச் சார்புநிலையற்ற பொதுப்படைத்தன்மை வெளிப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர்

நல்லுறவு, அமைதி மற்றும் மனிதகுல முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர்களும் கலைஞர்களுமாகிய நாங்கள் இந்தியா பாகிஸ்தானிடையே இப்போது நிலவும் போர்ச்சூழல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளோம். போர் இருதரப்பிலும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கிறது. மனிதர்கள் இரத்தம் மண்ணில் சிந்துவதைத் தவிர போரின் சாதனை எதுவுமில்லை.

போரின் சுமையாவும் பொதுமக்களின் மீது விழும். போர் எளிய மக்களின் உயிர் மற்றும் உடமைகளை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது. போர் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பொருளாதாரப் பின்னடைவு, சூழலியல் கேடு மற்றும் தீராத அமைதியின்மைக்குள் நாட்டைத் தள்ளிவிடும். மதரீதியான மோதல்களுக்கும், வெறுப்பரசியலுக்கும் வழிவகுத்துவிடும் எனக் கடந்தகால அனுபவங்களிலிருந்து கவலைகொள்கிறோம்.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

போரினால் உலகளாவிய அளவில் ஏற்பட்ட இழப்புகளைக் கவனத்தில்கொண்டு, இருநாட்டு அரசுகளும் போர் பதற்றத்தை தணிக்கவேண்டும் என்றும் சட்டரீதியாகவும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் மூலமும் தீர்வு காண வேண்டும் என்றும் கோருகிறோம். போருக்கு எதிராக அமைதியைக் கோருவது சமூக அக்கறை கொண்ட அனைவரது கடமை. நாட்டின் எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் மற்றும் மனிதவுரிமைகளுக்காக உயர்கிறது எமது குரல்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *