
திருச்சி: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சுமார் 6 கி.மீ தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், புத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று திருச்சி வந்தார். பின்னர், துவாக்குடி அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 5.30 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டார். டிவிஎஸ் டோல்கேட் சந்திப்பிலிருந்து குட்ஷெட் மேம்பாலம் வரை அரை கி.மீ தொலைவுக்கு நடந்து சென்றார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து காரில் ஏறி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இறங்கினார்.