
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியா கொடுத்த பதிலடியில், பாகிஸ்தானில் லாகூர் உட்பட பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்கள் அழிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா திட்டமிட்ட துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த 25 நிமிட தாக்குதலில், தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 குண்டுகள் வீசப்பட்டன. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.