காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரௌடி லூவியரசன் (வயது 34). இவரின் மனைவி கீர்த்தனா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், லூவியரசனின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞன் அருண்குமார் என்பவருடன் லூவியரசனின் மனைவி கீர்த்தனாவுக்கு திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஹெச்.எஸ் எனும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான லூவியரசன் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாவது, கைதாகி சிறைச் செல்வது என வீடு தங்காமல் இருந்திருக்கிறார்.

ரௌடி லூவியரசன்

இதனால், லூவியரசனின் வீட்டுக்கே சென்று அவரின் மனைவியுடன் சிரித்துப்பேசி திருமணம் மீரிய உறவில் ஈடுபட்டுவந்திருக்கிறார் உறவினர் அருண்குமார். மனைவியின் நடத்தைக் குறித்து ரௌடி லூவியரசனுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, தனக்குத் துரோகம் இழைத்த உறவினர் அருண்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் லூவியரசன். அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகிலுள்ள ஆலப்பாக்கம் பகுதியிலிருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவரலாம் எனக்கூறி அருண்குமாரை பைக்கில் அழைத்துகொண்டு வந்திருக்கிறார் லூவியரசன்.

கொடூர கொலை

ஆலப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் ஜல்லி மெஷின் அருகே வந்தபோது பைக்கை நிறுத்திவிட்டு லூவியரசன் மது குடித்திருக்கிறார். கோயிலுக்கு மாலை அணிந்திருந்ததால் அருண்குமார் மது குடிக்காமலிருந்திருக்கிறார். போதை ஏறியதும், தனது மனைவியுடனான உறவு கேட்டு அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் லூவியரசன்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, அருண்குமாரை கொடூரமாகத் தாக்கி கழுத்தை துணியால் இறுக்கியிருக்கிறார். மூச்சு நின்று நிலைகுலைந்து சரிந்த அருண்குமாரை ஆத்திரம் தீரும் வரை கத்தியால் குத்தினார் லூவியரசன்.

கொலை
கொலை

கழுத்தையும் அறுத்து, ஆணுறுப்பையும் வெட்டினார். இந்த கொடூரத் தாக்குதலில் அருண்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, லூவியரசன் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொல்லப்பட்டுக் கிடந்த அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக ரௌடி லூவியரசனை கைது செய்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *