பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது, இந்திய ராணுவம் நேற்று (மே 7) `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தத் தாக்குதலை உலகத் தலைவர்கள் உள்பட இந்திய அரசியல் தலைவர்கள், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் வரவேற்றனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், தி.மு.க உள்பட கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எல்லைகளில் வசிக்கும் நம் மக்களின் பாதுகாப்பு குறித்த பிரச்னைகளை எடுத்துரைத்தோம். பூஞ்ச் ​​பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்தோம். இதில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரசாங்கம் எங்களுக்கு உறுதியளித்திருக்கிறது.

தேச நலனுக்காக வேறு எந்தப் பிரச்னையிலும் நாங்கள் அழுத்தம் தரவில்லை. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார். முக்கியமாக, அனைத்து பிரசாரங்களும் போலியானவை என்று அவர்கள் (மத்திய அரசு) தெரிவித்தனர்.” என்று கூறினார்.

அதேபோல், அனைத்து கட்சி கூட்டத்துக்குப் பின்னர் ஊடகத்திடம் பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, “ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், இந்தியாவின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும், அரசாங்கத்துடன் நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் கலந்திருக்க வேண்டும் என்று நான் உள்பட கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தெரிவித்தோம்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *