டெஸ்ட் டியூப் பேபி என்றவுடன்,  நம் அனைவருக்கும் பொதுவாக நினைவில் வருவது, வட்டமான கருமுட்டையை ஒருபக்கம் கருவி ஒன்று தாங்கி நிற்க, மறுபக்கம் அந்தக் கருமுட்டையை ஓர் ஊசி துளைத்து, அதன் குழாய் வழியாக விந்தணு ஒன்று உள்ளே சேர்க்கப்பட்டு, கரு உருவாகி, அதற்குப்பின் இரண்டு, நான்கு செல்களாக அந்தக் கரு உருவாகும் ஓர் அழகிய கறுப்பு-வெள்ளை காணொளி தானே? உண்மையில், அந்தக் காணொளி, செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஓர் அங்கமான இக்ஸி, அதாவது Intra Cytoplasmic Sperm Injection (ICSI) முறை என்கிறார்கள் செயற்கை கருத்தரிப்பு நிபுணர்கள்.

அது என்ன இக்ஸி முறை… ஐ.வி.எஃப் சிகிச்சையும் இக்ஸியும் வேறு வேறா… இதுபோன்ற வேறு சிகிச்சைகள் எதுவும் செயற்கை கருத்தரிப்பில் உள்ளனவா… யாருக்கு, எந்த வகையான சிகிச்சை முறை பயனளிக்கும்… இவற்றின் சாதக பாதகங்கள் என்ன என்பதையெல்லாம் இனி தெரிந்துகொள்வோம்..!

கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன்

டெஸ்ட் டியூப் பேபி எனும் ஐ.வி.எஃப் & ஈ.டி

நமக்கு நன்கு பரிச்சயமான டெஸ்ட் டியூப் பேபி எனும் ஐ.வி.எஃப் & ஈ.டி. (In Vitro Fertilization & Embryo Transfer) என்பது, குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினரின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை தனியே எடுத்து, அதற்கான ஆய்வகத்தில் அவற்றை சேகரித்து, அவற்றில் தரமானவற்றை கருவாக உருவாக்கி, தக்க அடைகாப்புக்குப் பின் (Incubation), அந்தக் கருவை சிகிச்சைபெறும் பெண்ணின் கருப்பையில் செலுத்தும் முறை என்பதை அறிவோம்.

டெஸ்ட் டியூப் பேபி

அதாவது, பிரத்யேகமான ஆய்வகக் கூடத்தில், ‘பெட்ரி டிஷ்’ எனும் பிரத்யேக தட்டையான கலனில், நல்ல நீந்தும் திறன்மிக்க ஆயிரக்கணக்கான விந்தணுக்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருமுட்டையையும் தகுந்த நீர்மக் களத்தில் வைத்து, அவை தாமாகவே கூடி, கருக்கட்டல் நிகழ்வதுதான் இந்த ஐ.வி.எஃப். முறை.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆரோக்கியமான விந்தணுவும் கருமுட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்கும் முறைதான் இது. அதாவது, இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வை, அதுவும் அந்த இயற்கை நிகழ்வைப் பிரதிபலிக்கும் வகையிலேயே செயற்கையாக நிகழ்த்துவதுதான், செயற்கை கருத்தரிப்பு எனும் ஐ.வி.எஃப். முறை. 

செயற்கை கருத்தரிப்பு… இந்த 5 விஷயங்கள் முக்கியம்!

ஆனால் செயற்கை கருத்தரிப்பு முறைகள் (ART Assisted Reproductive Techniques) எனும் பரந்த வகைப்பாட்டில் ஐ.யூ.ஐ., ஐ.வி.எஃப் மற்றும் வாடகைத்தாய் முறைகள் உள்ளதுபோலவே, ஐ.வி.எஃப் சிகிச்சை முறையிலும், GIFT (Gamete Intra Fallopian Transfer), ZIFT (Zygote Intra Fallopian Transfer), Routine IVF, Natural Cycle IVF, ICSI (Intra Cytoplasmic Sperm Injection) என பற்பல வகைபாடுகள் உள்ளன.

செயற்கை கருத்தரிப்பு

கேட்பதற்கு சற்று மலைப்பாகவும் பிரமிப்பாகவும் உள்ளது என்றாலும், இவையனைத்திலும் பின்பற்றப்படும் வழிமுறைகள் ஏறத்தாழ ஒரேபோலத்தான் இருக்கும் என்றுகூறும் கருத்தரிப்பு வல்லுநர்கள், மருந்துகள் மூலம் சினைப்பைகளைத் தூண்டுதல், அவற்றிலிருந்து சினைமுட்டைகளை மீட்டெடுத்தல், விந்தணுக்களைச் சேகரித்தல், கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் ஆகிய இரண்டு உயிரணுக்களையும் ஆய்வகத்தில் சேர்த்து கரு உருவாக்குதல், உருவான கருவை தக்க சமயத்தில் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் சேர்த்தல் ஆகிய ஐந்தும் செயற்கை கருத்தரிப்பின் இன்றியமையாத வழிமுறைகள் என்கின்றனர்.

இதில், ஆரம்பநாள்களில் பயன்படுத்தப்பட்டு வந்த GIFT மற்றும் ZIFT சிகிச்சை முறைகளில், கருமுட்டை மற்றும் விந்தணுக்களை தனியே சேகரித்து, அவற்றை பெண்ணின் சினைக்குழாய்க்குள் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை வாயிலாகச் செலுத்தி, கருவுறுதல் நிகழ்வு தானாக நடைபெறக் காத்திருக்கும் சிகிச்சை GIFT என்றும், உயிரணுக்களுக்கு பதிலாக ஆய்வகத்தில் உருவான கருவை அதே அறுவை சிகிச்சை வாயிலாக சினைகுழாய்க்குள் செலுத்தும் சிகிச்சை ZIFT என்றும் வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு முறைகளிலும், கரு உருவாகி, பின் இயற்கையாகவே அது நகர்ந்து கருப்பைக்குள் பதிந்து வளரவேண்டும் என்பதால், வெற்றி விகிதம் இவற்றில் குறைவு என்பதுடன், எக்டோபிக் சினைகுழாய் கர்ப்பம் போன்ற உயிருக்கே ஆபத்தான பக்கவிளைவுகளையும் இவை ஏற்படுத்தலாம் என்பதால் இந்தச் சிகிச்சை முறைகள், வெகு அரிதான சூழல்கள் தவிர பொதுவாக கைவிடப்பட்டுள்ளன.

ஐ.வி.எஃப் சிகிச்சையில் என்ன நடக்கும்?

அடுத்து, Routine IVF எனப்படும் பெரும்பான்மையினரிடம் மேற்கொள்ளப்படும் ஐ.வி.எஃப் சிகிச்சை. இதில், குறைந்தது 8-10 கருமுட்டைகள் கிடைப்பதற்காக, சினைமுட்டைகளைத் தூண்டும் ஊசிமருந்துகள் பொதுவாக மாதவிடாயின் ஆரம்ப நாள்களிலிருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு, ஸ்கேனிங் மூலமாக கருமுட்டைகளின் அறைகலன்கள் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு, பின்னர் சிறு அறுவை சிகிச்சை வாயிலாக முதிர்ந்த முட்டைகள் சேகரிக்கப்பட்டு, கருத்தரிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஐ.வி.எஃப் கருத்தரித்தல்

அவற்றில் சில முட்டைகள் எதிர்கால சிகிச்சைக்கென உறைநிலையில் (Oocyte freezing) பாதுகாக்கவும் படுகின்றன. அதாவது இயல்பாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே உருவாகும் இடத்தில் பத்து முட்டைகள் வரை உருவாகச் செய்வது தான் Routine IVF முறை.

இந்தத் தூண்டுதல் சிகிச்சையில் ஏற்படும் இரட்டை கர்ப்பம், OHSS எனும் மிக அதிகமான சினைப்பை தூண்டுதல் நிலை அத்துடன் அதிகப்படியான செலவு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க, சிலருக்கு Natural Cycle IVF மேற்கொள்ளப்படுகிறது.

இம்முறையில், தூண்டுதல் மருந்துகளைத் தவிர்த்து, இயல்பாகவே உருவாகும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டும் சேகரிக்கப்பட்டு, அவை கருத்தரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் வெற்றி விகிதம் குறைவு என்றாலும் பக்கவிளைவுகள் இல்லாத காரணத்தால், மேலை நாடுகளில் இது பிரபலமடைந்து வருகிறது.

அதேபோல, உருவான கருவை உறைநிலையில் வைத்து, பிந்தைய மாதங்களில் கருப்பைக்குள் செலுத்தும் FET எனும் Frozen Embryo Transfer முறையும், அதன் கூடுதல் கருவுறுதல் விகிதத்தின் காரணமாக நடைமுறையில் உள்ளது.

இந்தச் செயற்கை கருத்தரிப்பு முறைகள் அனைத்திலும், கருமுட்டைகளைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலான, திறன்மிக்க விந்தணுக்கள் தேவைப்படுகின்றன என்பது நமக்குப் புரிகிறது.

செயற்கை கருத்தரிப்பு

ஆனால் சமயங்களில் ஆணின் காரணமாக, மிகவும் குறைந்த அளவிலான விந்தணுக்கள் காணப்படும்போதும், அசைவுத்திறன், உருவமைப்புக் குறை என, தரம் மிகக்குறைவான விந்தணுக்கள் காணப்படும்போதும் அல்லது விந்து வெளியேற்றப் பாதையின் அடைப்பு காரணமாக விந்தணுக்கள் முற்றிலும் இல்லாத நிலை காணப்படும்போதும் (Severe OAT syndrome/ Obstructive Azoospermia) இந்தக் கருத்தரிப்பு சிகிச்சைகள் எதுவும் பயனளிக்காது.

அப்போது மேற்கொள்ளப்படுவதுதான், நாம் காணொளியில் பார்க்கும் மேற்சொன்ன இக்ஸி, அதாவது Intra Cytoplasmic Sperm Injection (ICSI) முறையாகும். ஒரு கருமுட்டை + ஒரு விந்தணு கூடும் இந்தச் செயற்கை முறையில், நேரடியாக கருமுட்டையின் உட்கருவிற்குள் திறன்மிக்க ஒற்றை விந்தணு செலுத்தப்பட்டு கரு உருவாக்கப்பட்டு, இன்க்யூபேஷனுக்குப் பின்னர் கருப்பைக்குள் செலுத்தப்படுகிறது. 

இரண்டும் வேறு, வேறல்ல…

ஆக, ஐ.வி.எஃப் சிகிச்சையும் இக்ஸியும் வேறு வேறல்ல, ஐ.வி.எஃப் சிகிச்சையின் ஒர் அங்கம் தான் இக்‌ஸி. என்றாலும், ஆணின் காரணங்களால் கருத்தரிப்பு நிகழ வாய்ப்பற்ற நிலையில், ஒரு பெரிய வரமாகத் திகழ்வதுதான் இக்ஸி என்பதே உண்மை. கருவுறுதல் விகிதம் இன்னும் கூடுதலாக உள்ள இந்தச் சிகிச்சையில் செலவும் கூடுதல் என்பது நமக்குப் புரிகிறது.

செயற்கை கருத்தரிப்பு

இதில், விந்தணுக்களை ஆணின் விரையிலிருந்து நேரடியாகப் பெறும் TESE (Testicular Sperm Extraction) முறை, மற்றும் விந்தணுக்கிடங்கிலிருந்து PESA (Percutaneous Epididymal Sperm Aspiration) முறை ஆகிய நுண் சிகிச்சைகள் தேவைப்படும் போது மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் தரம் மிக்க விந்தணுக்களை இக்‌ஸி கருத்தரிப்பு முறையில் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.

இவை தவிரவும், மரபணுக்கள் சார்ந்த நோய்களை கருவிலேயே கண்டறிய உதவும் PGD (Preimplantation Genetic Diagnosis) எனப்படும் கரு மரபணு ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என, பல அதிசயிக்கத்தக்க முன்னேற்றங்களுடன் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை எனும் அறிவியல் நுட்பம். 

இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *