இந்திய கிரிக்கெட் அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை, 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐ.சி.சி கோப்பைகளை அடுத்தடுத்து வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா நேற்று (மே 7) திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

ரோஹித் தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் முதல்முறையாக நியூசிலாந்துக்கெதிராக 3 – 0 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது ஆகியவற்றால் டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

ரோஹித் சர்மா

அதோடு, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் ஓய்வுபெறுவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது.

ஆனால், மார்ச் மாதமே ரோஹித் தலைமையில் துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்திய அணி. இப்போது ஐ.பி.எல் தொடரிலும் ரோஹித் கம்பேக் மோடில் ஆடிவருகிறார்.

இத்தகைய சூழலில், ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கேப்டன்சிலியிலிருந்து ரோஹித் நீக்கப்படப்போவதாக நேற்று தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக நேற்று மாலை அறிவித்தார் ரோஹித். ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரோஹித், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், ரோஹித்தின் இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அஜின்க்யா ரஹானே அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

 அஜின்க்யா ரஹானே
அஜின்க்யா ரஹானே

நேற்றைய கொல்கத்தா vs சென்னை போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித்தின் டெஸ்ட் ஓய்வு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த ரஹானே, “அப்படியா… அது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது.

போட்டியில் இருந்ததால் எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், அவருக்கு என் வாழ்த்துகள். பேட்டிங்கில் அவர் 5, 6-வது வரிசையில் இறங்கி தனது கரியரைத் தொடங்கினார். பின்னர், அவர் தன்னை தகவமைத்துக் கொண்ட விதம் அற்புதமாக இருந்தது.

அவர் எப்போதும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவும் சுதந்திரத்துடன் விளையாடவும் விரும்பினார். நான் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றதும் நிச்சயம் அவருக்கு போன் செய்வேன் அல்லது ஒரு மெசேஜ் அனுப்புவேன்.” என்று கூறினார்.

 அஜின்க்யா ரஹானே
அஜின்க்யா ரஹானே

2022 ஜனவரியில் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்தது. அந்த அணியில் இடம்பிடித்திருந்த ரஹானே, அந்தத் தொடருக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்கிடைக்கவில்லை.

இருப்பினும் 2023 ஐ.பி.எல்லில் சாம்பியன் பட்டம் வென்ற சி.எஸ்.கே அணியில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தினால், அதே ஆண்டு ஜூனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் ரஹானே இடம்பிடித்தார்.

அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்தவர் ரஹானேதான் (89 & 46) என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *