
சமீபத்துல வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துல, சசிகுமார் – சிம்ரன் ஜோடியின் பக்கத்து வீட்டில் வசிக்கிற மங்கையர்க்கரசி கேரக்டர்ல ஒன்றிப்போய் நெகிழ்ச்சியா நடிச்சிருக்காங்க ஶ்ரீஜா ரவி. அந்தப் படத்துல நடிச்ச அனுபவம்பற்றி நம்மோட நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணிக்கிட்டாங்க.
`டப்பிங் ஒருபக்கம், நடிப்பு மறுபக்கம்’
”நான் 1973-ல குழந்தை நட்சத்திரமா மலையாளத்துல அறிமுகமானேன். அங்க 10 படங்கள் வரைக்கும் நடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் டப்பிங் கொடுக்க ஆரம்பிச்சேன். எனக்கு ராஜீவ் மேனனை நல்லா தெரியும். அவர் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படம் டைரக்ட் பண்ணிக்கிட்ருந்தப்போ ஒருநாள் எனக்கு போன் பண்ணி, ஒரு கேரக்டர்ல நீங்க தான் செய்யணும்னு சொன்னார்.
நடிகை தபு கூட வேலை பார்க்கிற ஒரு கர்ப்பிணிப்பெண் கேரக்டர் அது. அதுக்கப்புறம் டப்பிங் ஒருபக்கம், நடிப்பு மறுபக்கம்னு டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். வேதாளம், வீரன், பாயும் புலி, ஜீவா, டாக்டர், வீர தீர சூரன்னு வரிசையா நிறைய வாய்ப்புகள் வந்துச்சு.
`ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருந்துச்சு’
‘வீர தீர சூரன்’ல நடிச்சப்போ, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துச்சு. நான் டப்பிங் பேசும்போதே விக்ரமுக்கு என்னைத் தெரியும். அந்தப்படத்துல துஷாராவோட அம்மாவா நான் தான் நடிச்சேன். நாம இந்தப் படத்துல நடிக்கிறோம்னு விக்ரம் சாருக்கு தெரியுமான்னுகூட யோசிச்சிருக்கேன். ஆனா, ஒரு சீன்ல குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறுற மாதிரி ஒரு சீன். அந்த சீனை நடிச்சி முடிக்கிறேன். விக்ரம் எப்போ அந்த ரூமுக்குள்ள வந்தாருன்னே தெரியல. என்னை அப்படியே கட்டிக்கிட்டு `ஹாய், ஹெவ் ஆர் யூ?’ விசாரிச்சார். அந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருந்துச்சு.

`இப்போ வரைக்கும் நாங்க டச்ல தான் இருக்கோம்’
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துல நடிக்க கேட்டப்போ உடனே ஒத்துக்கிட்டேன். ஏன்னா, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸோட லவ்வர்ஸ், குட்நைட் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் சசிகுமார் சாருக்கு அம்மாவா எவிடென்ஸ் படத்துல நடிச்சிருக்கேன். ஸோ, அவரை எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனா, சிம்ரனுக்கு நேருக்கு நேர், கனவே கலையாதேன்னு ரெண்டு படங்களுக்கு நான் டப்பிங் பேசியிருந்தாலும், அவங்களோட சேர்ந்து நடிக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம்.
அவங்க டாப் ஹீரோயினா இருந்தப்போ நாமெல்லாம் அப்படி கொண்டாடியிருக்கோம். அவங்களோட சேர்ந்து நடிக்கப்போறோம். எப்படிப் பழகுவாங்க அப்படிங்கிற யோசனையெல்லாம் இருந்துச்சு. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்களைப்பார்த்ததும் நானே அவங்க கிட்ட போய் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். அவங்களுக்கு டப்பிங் பேசினதையும் சொன்னேன். ரொம்ப ஹேப்பி ஆகிட்டாங்க. செல்ஃபி எடுத்துக்கிட்டு, என் நம்பரையும் வாங்கிட்டாங்க. மெசேஜ்ல இப்போ வரைக்கும் நாங்க டச்ல தான் இருக்கோம்.
சசிகுமார் ஹீரோ மாதிரி நடந்துக்கவே மாட்டார். இயல்பான, மாஸ்க் போடாத மனிதர் அவர். டைரக்டர் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தோட அவுட் லைன் சொன்னப்போ, என்னோட கேரக்டர் இவ்ளோ தாக்கத்தை ஏற்படுத்தும்னு நான் நினைச்சே பார்க்கல. டைரக்டர் அபிஷன் ஜீவிந்த் நல்ல பையன். அவங்க அப்பாம்மா அபியை ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க. அந்த யூனிட் என்னை ஓர் ஆர்ட்டிஸ்ட் மாதிரியே பார்க்கல. அம்மா மாதிரி மரியாதையா, அன்பா நடத்தினாங்க.

என் கேரக்டர் இறந்துபோற சீனை ஈவ்னிங் தான் ஷூட் பண்ணாங்க. வெளிச்சம் போயிட போகுதுன்னு ரொம்ப டென்ஷனா தான் எடுத்தாங்க. ஒரே டேக்ல நான் நடிச்சி கொடுக்க, டேக் ஓகேன்னு சொல்ல வேண்டிய டைரக்டர் ‘சூப்பர் மேம்’னு மைக்ல கத்தினாரு. நான் அதை எதிர்பார்க்கவே இல்ல. இந்த வயசுல எனக்கு இந்த மாதிரி கேரக்டர் கொடுத்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்” என்கிறார் நெகிழ்ச்சியாக ஶ்ரீஜா ரவி.