
சென்னை வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்திருந்தது. சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, அவரின் ஓய்வை பற்றிய ஒரு மெசேஜையும் ரசிகர்களுக்காக சொல்லியிருக்கிறார்.
‘போட்டியை பற்றி தோனி!’
தோனி பேசுகையில், ‘வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே. இந்தப் போட்டியில் முக்கியமான சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த மாதிரியான சமயத்தில் ரொம்பவே யதார்த்தமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். எந்தெந்த விஷயங்கள் நமக்கு சாதகமாக செல்லவில்லை என்பதை உணர வேண்டும்.
எங்களிடம் 25 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து அடுத்த ஆண்டுக்கான தீர்வை தேட வேண்டும். எந்த பேட்டர்கள் எந்த ஸ்லாட்டில் செட் ஆவார்கள் என்பதை கண்டடைய வேண்டும். சூழலுக்கு ஏற்ப வீசும் பௌலர்களை கண்டடைய வேண்டும்.

நடப்பு சீசனில் நிறைய பேட்டர்கள் பெர்ஃபார்ம் செய்யவில்லை. சில சமயங்களில் விஷயங்கள் நமக்கு சாதகமாக அமையாது. நீங்கள் அவுட் ஆவீர்கள். ஆனாலும், உங்களை நீங்கள் நம்பி நிறைவோடு ஷாட்களை ஆட வேண்டும். அப்படியான வீரர்கள்தான் இப்போதைய அணியில் இருக்கிறார்கள்.
துபேவுடன் ஆடும்போது அவர்களின் ஸ்பின்னர்களை ஆட்டத்துக்குள் வர வைத்துவிடாதே. நான் தான் கடைசி பேட்டர், அதனால் ஸ்பின்னர்களுக்கு எதிராக விக்கெட்டுகளை இழக்ககூடாது என்றேன். டெவால்ட் ப்ரெவிஸூக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் எங்களுக்கு ஆட்டத்தில் சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். துபேவும் கால்குலேட்டடாக ஷாட்களை ஆடினார்.’ என்றார்.
‘ஓய்வு பற்றிய மெசேஜ்!’
மேற்கொண்டு தன்னுடைய ஓய்வைப் பற்றியும் தோனி பேசினார். அவர் கூறியதாவது, ‘எனக்கு எல்லா சமயங்களிலும் ரசிகர்களின் இந்த அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. எனக்கு 43 வயதாகிறது. நிறைய கிரிக்கெட் ஆடிவிட்டேன். எது என்னுடைய கடைசி சீசன் என ரசிகர்களுக்கு தெரியாது. அதனால்தான் அவர்கள் இந்தளவில் வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

நான் ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடுகிறேன். இந்த ஐ.பி.எல் முடிந்தவுடன் 6-8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதன்பிறகு என்னுடைய உடல் எவ்வளவு பிரஷரை தாங்குகிறது என்பதை அறிய வேண்டும். ஓய்வை பற்றி இப்போது எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனாலும் ரசிகர்கள் அன்பும் ஆதரவும் அற்புதமானதாக இருக்கிறது.’ என்றார்.