
சமந்தா ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் சமந்தா ஒரு கேமியோ கேரக்டரிலும் நடித்திருக்கிறாராம்.
இத்திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் தற்போது சமந்தா ஈடுபட்டு வருகிறார்.
அப்படி ப்ரோமோஷனுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளராக அவர் சந்திக்கும் விஷயங்கள் தொடர்பாக பேசியிருக்கிறார்.
சமந்தா பேசுகையில், “நடிகையாக இப்போதுதான் ஒரு வெள்ளிக்கிழமை எப்படி இருக்குமென எனக்கு தெரிகிறது.
இதுதான் ஒரு தயாரிப்பாளராக எனக்கு முதல் வெள்ளிக்கிழமை. அதிகப்படியான பயத்துடன் இப்போது நான் இருக்கிறேன்.
இப்போதுதான் ஒரு தயாரிப்பாளர் சந்திக்கும் உண்மையான சவால்கள் பற்றி எனக்கு தெரிய வருகிறது. கடந்த வாரத்திலிருந்து உறக்கமில்லாத இரவுகளை செலவழித்து வருகிறேன்.
எங்களுடைய குழுவும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். ‘சுபம்’ திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது.
எனக்கு அப்படத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கை இருக்கிறது. நடிகையாக பல விஷயங்களை சாதித்திருக்கிறேன்.
அதுமட்டுமின்றி அதிகப்படியான மக்களின் காதலும் எனக்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும், எப்போதும் எனக்குள் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.
நான் சினிமாவிலிருந்து எடுத்த இடைவேளை சமயத்தில் பல விஷயங்கள் குறித்து யோசித்தேன்.
அந்த நேரத்தில் நடிப்பு வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. மேலும் மீண்டும் திரைப்படங்களுக்கு வருவேனா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.
அப்போதுதான் தயாரிப்பு என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தேன்.
நான் இந்தத் துறையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இருக்கிறேன்.
இந்த அனுபவத்துடன், ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்தேன்.
எந்தப் பிரமாண்ட அறிவிப்பும் இல்லாமல் அமைதியாகப் படத்தைத் தொடங்கினோம்.
எட்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்தோம். இப்போது பார்வையாளர்களுக்கு இதை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
நடிகையாக இருந்தபோது, தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை நான் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.
ஒரு காட்சி கூட திட்டமிட்டபடி நடக்காவிட்டால், பணம் மற்றும் நேரம் ஆகிய இரண்டிலும் பெரிய இழப்பு ஏற்படலாம்.
இப்போது, படப்பிடிப்பில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறேன்.
‘சுபம்’ படத்திற்கு தேவையான அளவு மட்டுமே செலவு செய்தோம். மக்கள் இதைப் பார்க்கும்போது, எதுவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலவு செய்யப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
ஒவ்வொரு கதையும், திரைக்கதையும் அதற்கேற்ற பட்ஜெட்டைக் கொண்டிருக்கும், அதை நாங்கள் கடைப்பிடித்தோம்.” எனக் கூறினார்.