
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்காமல் வெங்கடேஷ் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உதவிப் பொறியாளர் வெங்கடேஷையும், போர்மேன் நந்தகோபாலையும் நேரில் சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார். அதற்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் வெங்கடேஷ் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சாமிநாதன் இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் ரசாயணம் தடவிக் கொடுத்த பணத்தை வெங்கடேஷ், நந்தகோபாலிடம் வழங்க சாமிநாதனிடம் போலீஸார் கொடுத்திருந்தனர். ஆனால், அந்தப் பணத்தை ஒருவாரமாக வாங்காமல் இருவரும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், சாமிநாதனை அழைத்த போர்மேன் நந்தகோபால் பணத்தை கொண்டுவந்து கொடுக்குமாறு புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளார். இதையடுத்து, போர்மேன் நந்தகோபாலிடம் பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, உதவிப் பொறியாளர் வெங்கடேஷையும் கைது செய்தனர். மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.