
விமானத்தில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தவறுதலாக ஒயின் வழங்கியதை அடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
ஷாங்காயில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தண்ணீருக்கு பதில் வெள்ளை ஒயின் பரிமாறியதாக அந்த குழந்தையின் தாயார் புகார் அளித்துள்ளார்.
கேத்தே பசிபிக் விமானத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்படி, இந்த சம்பவம் குறித்து சீன ஊடகத்தளமான ரெட்நோட்டில் சிறுவனின் தாயார் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் இரவு உணவின் போது தனது மகன் கோழிக்கறி மற்றும் தண்ணீர் சாப்பிட்டதாகவும் அதன் பின்னர் தண்ணீர் போன்ற ஒரு பானம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அந்த பானத்தை குடித்த பிறகு அதன் சுவை குறித்து அவரது தாயாரிடம் அந்த சிறுவன் கூறி இருக்கிறார். அதன் பின்னர் அவர்கள் அதனை குடித்து பார்த்தபோது அது வெள்ளை ஒயின் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக விமான பணிப்பெண்ணை எச்சரித்ததாகவும் அவர் இவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அதன் பின்னர் அந்த சிறுவனுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு விமான குழு உறுப்பினரை அழைத்து முறையாக புகார் பதிவு செய்து விமானத்தில் உள்ள மருத்துவ ஆலோசனை சேவையை தொடர்பு கொண்டுள்ளனர்.
விமானத்தில் இருந்த ஒரு பிரெஞ்சு மருத்துவர் குழந்தையை பரிசோதித்த போது அவர் நலமாக இருப்பதாக கூறினார் என்றும் தாயார் தெரிவித்தார்… இந்தப் பதிவு வைரலானதை அடுத்து கேத்தே பசிபிக் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் குழந்தையின் டிக்கெட் விலை திருப்பி தரவும், எந்த ஒரு மருத்துவ பரிசோதனைகளுக்கும் பணம் செலுத்தவும் விமான நிறுவனம் முன் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.