
கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த மைலோடு சரல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (68). கட்டடம் கட்டும் காண்டிராக்டர். இவரது மனைவி மார்கிரேட் மேரி (57). இவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் சொந்த வீடுகட்டி குடியேறினர். இவர்களுக்கு மேரி டெல்பர்ட் (38) என்ற மகளும், ஜோபர்ட் (37) என்ற மகனும் உண்டு. மகள் மேரி டெல்பர்டை மைலோடு சேவியர்புரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மேரிடெல்பர்ட் தனது கணவர், குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்துவருகிறார். ஜோபர்ட் திருச்சியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் மேலாளராக பணிபுரிந்துவந்த நிலையில் சேவியர்புரத்தைச் சேர்ந்த அமுதா (32) என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்தார். ஜோபர்ட் – அமுதா தம்பதிக்கு ஜெகானா (9), ஜோபினா (8) ஆகிய 2 மகள்களும், ஒன்றரை வயது ஆன ஜோகன் ஒரு மகனும் இருந்தனர். ஜோபர்ட் குடும்பத்துடன் திருச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மகள்கள் இருவரும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்கு மற்றும் மூன்றாம் வகுப்பில் படித்து வந்தனர்.
கடந்த மாதம் ஜோபர்ட் தனது மனைவி குழந்தைகளுடன் திருநெல்வேலியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து குடும்பத்தினர் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டம், மைலோட்டில் உள்ள குடும்ப வீட்டிற்கு சென்றனர். சில நாள்கள் அங்கு தங்கியிருந்துவிட்டு கடந்த 27-ம் தேதி ஒரே காரில் அனைவரும் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர். தளபதி சமுத்திரம் பகுதியில் சென்ற போது, சென்டர் மீடியனைத் தாண்டி தாறுமாறாக எதிரில் வந்த மற்றொரு கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் தனிஸ்லாஸ் மற்றும் அவரது பேத்தி ஜோபினா ஆகியோரை தவிர மற்ற அனைவரும் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்தனர். எதிர்ப்புறம் வந்த காரில் இருந்த திருநெல்வேலி கான்னங்குளத்தைச் சேர்ந்த மெல்கிஸ் (55) என்பவரும் மரணமடைந்தார்.

சிறுமி ஜோபினா படுகாயம் அடைந்த நிலையில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தலையில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனிஸ்லாஸ், மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதார். என்னையும் கொன்றுவிடுங்கள் என கதறி அழுதுகொண்டு இருந்த தனிஸ்லாஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணமடைந்தார். தனிஸ்லாஸ் அவரது மனைவி, மகன், மருமகள், 2 பேரக்குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் 6 பேரும் கோர விபத்தில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

மரணமடைந்த 6 பேரின் உடல்களும் மைலோடு சரல்விளையில் உள்ள குடும்பக் கல்லறை தோட்டத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த விபத்தில் 8 வயது சிறுமி ஜோபினா சுமார் 11 நாட்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை, கால்கள், தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இன்றி ஜோபினா இன்று உயிரிழந்தார். இதையடுத்து நெல்லை விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்த விபத்தில் காரில் பயணித்த தனிஸ்லாசின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் (7 பேர்) பலியாகிய சோகம் அரங்கேறியுள்ளது.