AI (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகையே தன் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறது. சாதாரண புகைப்படம் எடுப்பதில் துவங்கி, உயிரைக் காக்கும் மருத்துவத்துறை வரை செயற்கை தொழில்நுட்பத்தின் ஆதிக்கம்தான் பெருமளவில் உள்ளது. என்னதான் இந்த தொழில்நுட்பம் கன கச்சிதமாக, குறுகிய நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது போன்ற விஷயங்களில் மனிதர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பேருதவியாக இருந்தாலும்… இதனால் மனிதர்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.

சமீபத்தில் சீனாவின் தொழிற்சாலை ஒன்றில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்று மென்பொருள் கோளாறு காரணமாக மனிதர்களை தாக்க முயலும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

எக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில், தொழிற்சாலை ஒன்றில் கிரேன்-இல் மனித உருவிலான செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்று தொங்கவிடப்பட்டு இருக்கிறது. அதன் அருகில் இருக்கும் இரண்டு நபர்கள் கணிணி மூலம் ரோபோவின் செயல்களை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றனர். திடீரென அங்கு ஏற்பட்ட மென்பொருள் கோளாறால் அந்த ரோபோ கை மற்றும் கால்களை வேகமாக அசைக்கத் தொடங்குகிறது. சிறுது நேரத்தில் அந்த ரோபோ கைகால்களை வேகமாக அசைத்தபடியே அந்த தொழிலாளர்களை தாக்க முயல்வது போன்று முன்னோக்கி நகர்கிறது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அந்த ரோபோவிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடி அந்த ரோபோவின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முயல்கின்றனர். அதற்குள் கட்டுக்கடங்காத அந்த ரோபோ, அங்கிருந்த கணிணி மற்றும் பிற பொருள்களை உடைத்து விடுகிறது. பின்பு ஒருவரின் முயற்சியால் அந்த ரோபோ கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்திலும் இதே போன்றொரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. சீனாவில் அதிக மக்கள் கூடியிருந்த விழாவில் ரோபோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மக்களை தாக்க முயல்வது போன்று கூட்டத்தை நோக்கி ஓடியது. பின் அந்த ரோபோவின் செயல்பாடு நிறுத்தப்படவே எந்த பாதிப்பும் இல்லாமல் மக்கள் தப்பினர்.

அப்போது அந்த செய்தியும் இணையத்தில் வைரலானது. இது போன்ற சம்பவங்களுக்கு மென்பொருள் செயலிழப்பே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் ரோபோக்கள் மீதும், Ai தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்தும் மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *