
ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற 15 நாள்களில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்திய ராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரித்து வரவேற்று வருகின்றனர்.
அந்த வரிசையில் விசிக தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவன், “இந்திய இராணுவ நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமே ஆகும். எனவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கை இன்றியமையாத தேவையாக உள்ளது.
இந்திய இராணுவ நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமே ஆகும். எனவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கை…
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 7, 2025
அதேவேளையில், இந்த இராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்கவும், நாட்டின் அமைதியைப் பாதுகாக்கவும், நீடித்த அரசியல் தீர்வுகளை நோக்கிய இராஜதந்திர நடவடிக்கைகள் தேவை என்னும் முக்கியத்துவத்தை விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறது. பாகிஸ்தானில் ஒளிந்துள்ள பயங்கரவாதிகள் மீதான இந்த நடவடிக்கை, நமது நாட்டில் இஸ்லாத்தைப் பின்பற்றும் குடிமக்கள் மீதான வெறுப்பாகத் தடம் புரண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் ஒன்றிய அரசாங்கத்தை விசிக கேட்டுக்கொள்கிறது.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.