
புதுடெல்லி: “துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பஹல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது” என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து நாளை (மே 8) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. காலை 11 மணியளவில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலியாக, பிரதமர் மோடி அவரது ஐரோப்பிய பயணத்தை ஒத்திவைத்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.