விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம்.

ஆலோசனைக்கூட்டம்

போர்க்களத்தில் போரிடுவதற்காக இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கு 10 நாள்கள் பயிற்சி அளித்து எனது தலைமையில் போர்க்களத்தில் சண்டையிட 1000 இளைஞர்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அ.தி.மு.க.வின் பங்கு நிச்சயம் இருக்கும். அ.தி.மு.க.வினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக யுத்த களத்திற்கு இளைஞர்கள் தேவை என்று சொன்னால் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது. 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தி.மு.க. ஆட்சியில் இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

நீட் ரத்து செய்வதாக கூறினார்கள், ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் மதுக்கடையை மூடுவோம் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார், தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளதாக கனிமொழி எம்.பி சொன்னார், ஆனால் மதுக்கடைகளை மூடாமல் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி வருவாயை அதிகரித்துள்ளார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், செங்கல் விலை என எல்லாம் சரமாரியாக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் குடும்பத்தை நடத்தலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்பையும் ஸ்டாலின் ஆட்சியின் கஷ்ட காலத்தையும் வகுத்து பார்த்தால் எடப்பாடி பழனிசாமி சொல்வது பொய்யா? அல்லது ஸ்டாலின் சொல்வது பொய்யா? என்ற விவரம் மக்களுக்கு தெரியவரும்.

பேச்சு

முதல்வர் ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார், அது நடக்காது. தி.மு.கவிற்கு சரியான சம்மட்டி அடி அடிப்பார்கள். வரும் குரு பெயர்ச்சியில் தி.மு.க.விற்கு இறங்கு முகம், அ.தி.மு.க.விற்கு ஏறுமுகம். தி.மு.க.வின் ஆட்சியில் முதல்வரை தவிர அரசு ஊழியர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கான பதிலடி 2026 தேர்தலில் அவர்களுக்கு கிடைக்கும்” என கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *