
ஊட்டச்சத்து நிபுணரும், திமுக பிரமுகருமான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ், ”புதிய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அரசியலில் மரியாதைக் கொடுப்பதில்லை” எனக் குறிப்பிட்டு பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘அஜித் பிடிக்கும் அல்லது விஜய் பிடிக்குமா’ என்ற கேள்வியைக் குறிப்பிட்டு பதிலையும் பதிவிட்டிருக்கிறார் திவ்யா.
அந்தப் பதிவில், ” பிறர் என்னிடம் அஜித் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா எனக் கேள்வி எழுப்பினால் நான் எப்போதும் ‘எனக்கு அஜித் சார்தான் பிடிக்கும்’ எனக் கூறுவேன். அவர் சிறந்த நடிகர்.
முக்கியமாக, அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்.தனது வாழ்க்கையிலுள்ள பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துபவர்.
அவரின் ரசிகர்களும் அதைப் பின்பற்றுகிறார்கள். அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கோழைகளைப் போல துன்புறுத்தியது இல்லை.
அவர்கள் உயர்ந்த பண்புடன் நடந்துக் கொள்கிறார்கள். அஜித் சாரும் தன்னுடைய ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சமூட்டுவதையோ, அவமரியாதை செய்வதையோ ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்.
அவர் அமைதியாக பலருக்கும் உதவி செய்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான மிரட்டல்களையோ அல்லது துன்புறுத்தல்களையோ ஊக்குவிக்கும் அல்லது அதைப் பற்றி மௌனமாக இருக்கும் எந்தத் தலைவரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படத் தகுதியற்றவர் என்று நான் நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
திவ்யா சத்யராஜ் இந்தப் பதிவுக்கு சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.