
சென்னை: “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு பயனாளிக்கும் இதுவரைக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 14 லட்சம் மகளிர்க்கு, ஆயிரம் ரூபாய் என்று இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மக்கள் ஆதரவுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, திராவிட மாடல் ஆட்சிதான் தொடரப் போகிறது,” என்று சென்னையில் நடந்த நான்காண்டு சாதனை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்ற நான்காண்டு சாதனை விழாவில் பேசியது: “திராவிட மாடல் அரசின் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால்தான், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக மட்டுமல்ல, உற்சாகமாகவும் இருக்கிறேன். ஏனென்றால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழகம் நிமிர்ந்திருக்கிறது என்று தமிழக மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.