
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தனது எதிர்தாக்குதலான “ஆபரேஷன் சிந்தூரை” நடத்தியுள்ளது.
இந்த ”ஆபரேஷன் சிந்தூர்” நடத்த கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கமும் பாதுகாப்பு அமைப்பும் விரிவாக திட்டமிட்டுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை உடைப்பதும், பாகிஸ்தானின் ராணுவத்துக்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல், பாகிஸ்தான் பொதுமக்களின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் இந்த ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய பகுதிகளில் 25 நிமிட தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
“ஆபரேஷன் சிந்தூர்” எவ்வாறு திட்டமிடப்பட்டது?
ஏப்ரல் 22
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள், ஒரு காஷ்மீர் குதிரை சவாரி நடத்துபவர் கொடூரமாக கொல்லப்பட்டனர். சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது, ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இந்த சம்பவத்தின் போது சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது வருகையை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு விரைந்து சென்று ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் பாதுகாப்பு மறுஆய்வு நடத்தினார்.

ஏப்ரல் 23
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு கூறியது. பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் நடவடிக்கையாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது. சார்க் விசா விலக்கு திட்ட விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய அரசாங்கம் கூறியது.
பின்னர், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானின் தூதரக ஊழியர்களை குறைத்ததுடன், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர்கள் வெளியேற ஒரு வார காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
ஏப்ரல் 24
இதற்கிடையில் பீகாரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களது ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து தண்டிக்கும் என்றார். “கார்கில் முதல் கன்னியாகுமரி வரை, துக்கமும் ஆத்திரமும் நிலவுகிறது. பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளும், அதற்கு சதி செய்தவர்களும் “அவர்களால் கற்பனை செய்ய முடியாத தண்டனையைப் பெறுவார்கள்” என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
ஏப்ரல் 25
அரசாங்கம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, பஹல்காம் துயர சம்பவம் குறித்தும், இந்தியா எவ்வாறு எதிர்வினையாற்றத் தயாராகி வருகிறது என்பது குறித்தும் 15 அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர்.
ஏப்ரல் 29
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் பதிலடி நடவடிக்கையின் முறை, இலக்குகள் மற்றும் நேரம் குறித்து முடிவெடுக்க முழு சுதந்திரம் படைகளுக்கு இருப்பதாக பிரதமர் கூறியதாக செய்திகள் வெளியாகின.
பாதுகாப்பு ஒத்திகை!
மே 5
மத்திய உள்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மே 7 ஆம் தேதி சிவில் பாதுகாப்பு பயிற்சிகளை நடத்த உத்தரவிட்டது. இதில், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள், மின் தடைகள் ஆகியவை அடங்கும். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளில் பஹல்காம் பற்றி குறிப்பிடப்படவில்லை
Operation Sindoor

மே 6
இஸ்லாமாபாத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், நிலைமை குறித்து மூடிய அறைக்குள் ஆலோசனை நடத்தியது. பதற்றத்தைத் தணிக்க தூதர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதில் பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மே 7
அதிகாலை 1.05 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒன்பது இடங்களில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் , 24 துல்லிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
அரசாங்க வட்டாரங்களின்படி, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படும் நிலையில், எந்த ராணுவ இலக்கும் தாக்கப்படவில்லை என இந்தியா கூறியதற்கு, பொதுமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.
கிட்டத்தட்ட 2 வாரங்கள் அரசாங்கமும், பாதுகாப்பு அமைப்புகளும், துல்லியமாகத் திட்டமிட்டு சரியான பதிலடியைக் கொடுத்துள்ளன.