பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் சிந்தூர்” எனும் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் குறைவைத்து தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அமைச்சர் sky news க்கு அளித்த நேர்காணல் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிலவரங்கள் குறித்து ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீம்(Yalda Hakim) பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தாராரிடம்(Attaullah Tarar) காணொலி காட்சி மூலம் கேள்வி எழுப்பினார்.

pic courtesy

`பாகிஸ்தானில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை’

அதில், “இந்தியா, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை பயங்கரவாத முகாம்கள் மீதுதான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறுகின்றதே..?” என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் கூறிய பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தாரார், ”நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன், பாகிஸ்தானில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை.

இன்னும் சொல்ல போனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. எங்களின் எல்லைகளில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னணி நாடாக நாங்கள் இருக்கிறோம்” என கூறினார் .

இதில் எது உண்மை?

அப்போது குறுக்கிட்ட நெறியாளர் யால்டா ஹக்கீம், “ஒரு வாரத்திற்கு முன்பு, எனது நிகழ்ச்சியில், உங்கள்(பாகிஸ்தான்) பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், `பாகிஸ்தான் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்தல், ஆதரவளித்தல் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளாகப் செயல்படுதல் ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். உண்மையில், 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி, பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை நிறுத்தினார்.

எனவே, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று நீங்கள் கூறும்போது, ​​அது ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியதற்கும், பெனாசிர் பூட்டோ கூறியதற்கும், உங்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம் கூறியதற்கும் முரணாக இருக்கிறது. இதில் எது உண்மை?

உண்மையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதும் ஆதரிப்பதும் பாகிஸ்தானின் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, இருந்திருக்கிறது என்று பிலாவல் பூட்டோ சில நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறினார்.” எனத் தெரிவித்தார்.

இதில் எது உண்மை என்பது போன்ற கேள்விகளை நெறியாளர் ஹக்கீம் முன்வைக்க, பாகிஸ்தான் அமைச்சர் சற்று திணறி, `9/11 தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் ஒரு முன்னணி நாடாக இருக்கிறது.’ என சமாளித்ததோடு, நீங்கள் பாகிஸ்தான் வந்து பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும் என்றார்.

அதற்கும் நெறியாளர் ஹக்கீம், “நான் பாகிஸ்தானுக்குச் வந்திருக்கிறேன். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதையும் நாங்கள் அறிவோம்.” என்று பதிலளித்தார். இதனால் நேரலையில் பாகிஸ்தான் அமைச்சர் தாரார் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *