
தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தில் இரண்டு அலகுகள் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 300 பெண் ஊழியர்கள் உள்பட 1,370 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து என் .டி.பி.எல் நிர்வாகம் தங்களுக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 17-ம் தேதி முதல் என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . என்.டி.பி.எல் நிர்வாகம் என்.எல்.சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற 7 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 21 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் அனல் மின் நிலையம் முன்பு தங்கள் மேல் சட்டைகளை களைந்து ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரை நிர்வாண போராட்டம் மற்றும் நெற்றியில் பட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளைச்செயலாளர் அப்பாத்துரையிடம் பேசினோம், “என்.டி.பி.எல் நிர்வாகம், உடனடியாக எங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யக் கூடாது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்றார். ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.