சிவகாசி மாநகராட்சியின் திருத்தங்கல் பகுதி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் துரைப்பாண்டி. இவருடைய வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை அதிகாரிகள் இடிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களிடையே விசாரித்தோம். அப்போது பேசியவர்கள், “சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கலில் செங்குளம் கண்மாய் உள்ளது.

மிரட்டல்

பல வருடங்களாக தூர்வாரப்படாமல் கிடந்த இந்த குளத்தை தன்னார்வலர் அமைப்பு சார்பில் புனரமைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி குளத்தை தூர்வாரி கண்மாய் கரையை பலப்படுத்துவது, மறுகால் கண்மாய் மதகு மற்றும் நீர் வழி ஓடை சீரமைப்பு பணிகளும் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் செங்குளம் கண்மாயில் ஒரு பகுதி கரை சிவகாசி மாநகராட்சியின் 8-வது வார்டு பகுதிக்குள் வருகிறது. இந்த கரையொட்டிய பகுதியில் வாடகை வேன் ஸ்டாண்ட் மற்றும் பொது சுகாதார வளாகம் ஆகியவை உள்ளன. இதில் பொது சுகாதார வளாகம் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொது சுகாதார வளாகத்தின் கழிவுகள் கண்மாயில் கலப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், நீர்நிலை அசுத்தம் மற்றும் சுகாதாரம் கருதி கண்மாய் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறாக உள்ளவற்றையும் பொது சுகாதார வளாகத்தையும் இடித்து அகற்றி நிலங்களை மீட்டு தரும்படி அனுமதி கேட்டு தன்னார்வலர்‌ அமைப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தது.

பெட்ரோல் தேனுடன்..
துரைபாண்டி

அதன்படி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு சிவகாசி மாநகராட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணிக்காக ஜே.சி.பி. வாகனத்துடன் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தனர். அப்போது கண்மாய் கரையையொட்டி உள்ள பொது சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலர் துரைபாண்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், ‘பொது சுகாதார வளாகம் 8-வது வார்டு மக்களின் தினசரி பயன்பாட்டில் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தும் இந்த வளாகத்தை மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் இடித்து அகற்றுவது கண்டிக்கத்தக்கது. மாற்று இடத்தில் பொது சுகாதார‌ வளாகம் கட்டியமைத்த பின்பு இதை இடியுங்கள்.‌ அதுவரை மக்கள் பயன்பாட்டிலேயே இந்த பொது சுகாதார வளாகம் இருக்கட்டும். மீறி, எந்த மாற்று ஏற்பாடும் செய்யாமல், இந்த வளாகத்தை இடித்தால் இங்குள்ளவர்கள் மீண்டும் கண்மாய் கரையை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சுகாதரக்கேடும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மிரட்டல்

எனவே தற்சமயம் பொது சுகாதார‌ வளாகத்தை இடிக்கும் முயற்சியை கைவிடுமாறு’ கூறியிருக்கிறார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் பொது சுகாதர‌ வளாகத்தை இடிப்பதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த கவுன்சிலர் துரைபாண்டி, தனது டூவீலரில் வைத்திருந்த இருந்த பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு சரசரவென பொது சுகாதர‌ வளாக கட்டடத்தின் மீது ஏறினார். தொடர்ந்து, பொது சுகாதர வளாகத்தை இடிக்க முற்பட்டால் தான் இங்கேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டு கவுன்சிலர் துரைபாண்டியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள், சரக காவல் துணை கண்காணிப்பாளர்‌, மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அதே பகுதியில் மாற்று இடத்தில் பொது சுகாதர வளாகம் கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கவுன்சிலர் துரைபாண்டி சமாதானமடைந்து தீக்குளிக்கும் முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்” என்றனர். இந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *