
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம் என்று அவர் எடுத்துரைத்தார்.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.