
கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியப் படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதும் பாகிஸ்தானின் 4 இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் திவிரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
பஹவல்பூரில் உள்ள மர்காஸ் சுபனலா, தெஹ்ரா கலனில் சர்ஜால், கோட்லியில் மர்காஸ் அப்பாஸ், முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய தளங்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.
முர்டிகேயில் மர்காஸ் தைபா, பர்னாலாவில் மர்காஸ் அஹ்லே ஹதீத், முசாஃபராபாத்தில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம் ஆகியவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.
கோட்லியில் மக்காஸ் ரஹீல் ஷாஹித் மற்றும் சியால்கோட்டில் மெஹ்மூனா ஜோயா ஆகிய இடங்கள் ஹிஸ்புல் முஜாஹிதீனின் முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளானவை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஒன்பது இடங்களில் நான்கு பாகிஸ்தானிலும், ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்தன. இந்த நிலையில், பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.

மசூத் அசாரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தின் ஐந்து குழந்தைகள் எனப் 10 பேர் கொல்லப்பட்டதாக பிபிசி உருது தகவ்ல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் பெரிய நகரமான பஹாவல்பூர், லாகூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த சுபானலா முகாம், உஸ்மான்-ஓ-அலி வளாகம் என்றும் அழைக்கப்படுகிறது.