Doctor Vikatan: விரதம் இருப்பது என்பது உண்மையிலேயே உடலுக்கு நல்லது செய்யுமா அல்லது உடலை பலவீனமாக்குமா? விரதமிருப்பதால் உடல் டீடாக்ஸ் செய்யப்படும் என்பது உண்மையா? விரதம் இருப்பவர்கள், அதை முடிக்கும்போது எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி

சித்த மருத்துவர் அபிராமி

விரதமிருப்பது என்பது நிச்சயம் உடலை டீடாக்ஸ் செய்யும் விஷயம்தான். 15 நாள்களுக்கொரு முறை விரதமிருக்கலாம்.  அவரவர் வயது, உடலுழைப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து விரதமிருக்கும் நேரத்தை, தன்மையைத் தேர்ந்தெடுக்கலாம்.

இன்று இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent fasting) என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது, மீதமுள்ள 8 மணி நேரத்தில் சாப்பிடுவது போன்ற இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைப் பின்பற்றலாம். 

விரதமிருக்கும் நேரத்தில் வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பது, பழங்கள் அல்லது பழச்சாறு குடிப்பது என உங்களுக்கு வசதியானதைச் செய்யலாம். விரதமிருப்பதை ‘ஒரு பொழுது’ என்று சொல்வார்கள். அதற்கேற்றபடி ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடலாம். 

விரதமிருப்பதன் பலன்களை இன்று மேற்கத்திய நாடுகள் பெரிய அளவில் பேசுகின்றன. உடலை டீடாக்ஸ் செய்வது மட்டுமன்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, புற்றுநோய் ரிஸ்க்கை குறைப்பது என அதன் பலன்கள் ஏராளம்.

விரதத்தை முடித்ததும் எளிதில் செரிக்கும் கஞ்சி, இட்லி, இடியாப்பம், குழைவான சாதம், பழ ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

விரதம் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விரதம் முடித்ததும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது. விரதத்தை முடித்ததும் பலமாக எதையும் சாப்பிடாமல், எளிதில் செரிக்கும் உணவுகளையே சாப்பிட வேண்டும்.

கஞ்சி, இட்லி, இடியாப்பம், குழைவான சாதம், பழ ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். நாள் முழுக்க விரதமிருந்தோமே என்ற எண்ணத்தில் அதை முடித்ததும் விருந்து சாப்பாடு போல பலமாகச் சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது கூடாது.

அதாவது விரதமிருப்பதே டீடாக்ஸ் செய்வதற்குத்தான் என்பதால்,  டீடாக்ஸ் செயல்பாட்டைத் தடுக்கும்படியான உணவுகள் கூடாது. நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்கீரை, வேப்பம்பூ, மாதுளை, மணத்தக்காளிக் கீரை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். 

இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே, வயிற்றில் கழிவுகள் சேராது. குடல் ஆரோக்கியத்துக்கு கல்லீரல் ஆரோக்கியமும் அவசியம். அதற்கு கீழாநெல்லிக்கீரை, மூக்கிரட்டைக் கீரை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *