
புதுடெல்லி: நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள், முதல் 7 நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் மே 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.