
‘ஆப்பரேஷன் சிந்தூர்!’
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ஆப்பரேஷன் சிந்தூருக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
‘பாகிஸ்தான் பிரதமர் எதிர்வினை!’
X தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, ‘இழிவான எண்ணம் கொண்ட எதிரிகளை எப்போதும் வெல்லவிட மாட்டோம். போரை தூண்டும் வகையில் இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடியை கொடுக்க அத்தனை உரிமையும் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. உரிய பதிலடியும் கொடுக்கப்படும்.’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்தியாவின் இரண்டு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவுத் தலைவர் சில மணி நேரத்துக்கு முன்பு கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.