
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் பிரதமரை சந்தித்துப் பேசினர்.