
புதுடெல்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத் தயாரிப்பாளர்களுக்கு எதிரான பாடல் காப்புரிமை வழக்கின் இடைக்கால உத்தரவுக்கு டெல்லி உயர் நீதின்றம் தடை விதித்துள்ளது. எனினும், தனி நீதிபதியின் உத்தரவின்படி 10 நாட்களுக்குள் ரூ.2 கோடியை நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் தயாரிப்பாளர்களும் கட்டவேண்டும் என்று நீதிபதிகள் சி.ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்பால் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிஃபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்‌ஷன் மீது காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.