
‘லவ் டுடே’ படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் இவானா. தொடர்ந்து பலத் தமிழ் படங்களில் நடித்துவரும் இவர், தற்போது ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள “சிங்கிள்” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவிருக்கிறார்.
கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 9-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. ஸ்ரீ விஷ்ணு, வெண்ணிலா கிஷோர், கெட்டிகாவுடன் சேர்ந்து பணியாற்றியது அழகான தருணம்.
இந்தப் படத்தில் ஹரினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹரினி ஒரு நடன கலைஞர். எனக்கு நடனமாடுவது பிடிக்கும் என்பதால் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தற்போது நான் பி.ஜி படித்துக் கொண்டிருக்கிறேன். நான் படித்துக் கொண்டே சினிமாவில் நடித்தும் வருகிறேன். எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. தற்போது நடிக்கும் ‘சிங்கிள்’ படத்திற்காக தெலுங்கு மொழியை கற்றேன்” என்றார்.