மகாராஷ்டிராவில் 12வது வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வை மும்பை நைகாவ் பகுதியை சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கோரக்நாத் மோரே என்பவரும் எழுதி இருந்தார். கோரக்நாத் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படையில் பணியாற்றினார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பில்டர் ஒருவரின் கம்பெனியில் சட்டப்பிரிவில் பணியில் சேர்ந்தார். இதில் மோரேயிக்கு சட்டத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. மற்ற வழக்கறிஞர்களிடம் கேட்டு அதிகமான தகவல்களை தெரிந்து கொண்டார். ஆனாலும் எப்படியாவது சட்டம் படிக்கவேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் சட்டக்கல்லூரியில் சேர 12வது வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். ஆனால் மோரே 11வது வகுப்பு மட்டுமே படித்து விட்டு கடற்படையில் வேலைக்கு சேர்ந்திருந்தார். அதன் பிறகு அவர் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

மகளுடன் மோரே

வழக்கறிஞராக வேண்டும் என்பதற்காக 12வது வகுப்பு படிக்க முடிவு செய்து நைகாவில் உள்ள ரிஷி வால்மீகி வித்யாலயா பள்ளி முதல்வர் ரவீந்திர பட்கரை சந்தித்து 12வது படிக்க விரும்பும் தனது விருப்பத்தை தெரிவித்தார். உடனே ரவீந்திர பட்கரும் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வெளியில் இருந்து 12வது வகுப்பு தேர்வு எழுத ஏற்பாடு செய்து கொடுத்தார். அவரது குடும்பத்தினரும் தேவையான ஊக்கம் கொடுத்தனர். இதன் மூலம் 12வது வகுப்பு தேர்வு எழுதினார். இத்தேர்வில் 45 சதவீத மதிப்பெண் எடுத்து மோரே தேர்ச்சி பெற்றுள்ளார். இத்தேர்ச்சி மூலம் சட்டம் படிக்கவேண்டும் என்ற எனது கனவு நனவாக இருக்கிறது என்று மோரே மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

மோரேயின் மகள் டாக்டர் ஆர்த்தி இது குறித்து கூறுகையில், “எனது அப்பாவிற்கு வழக்கறிஞராகவேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால் அதற்கு 12வது வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். அதனால்தான் அவர் 12வது வகுப்பு படிக்க முடிவு செய்தார். மற்ற மாணவர்களை போல் தினமும் 2 முதல் 3 மணி நேரம் படிப்பார். அவர் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்தார். மோரேயின் மகனும் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். சட்டக்கல்லூரியில் சேரவும் பொது நுழைவு தேர்வு எழுதி இருக்கிறார் மோரே.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *