
திருவனந்தபுரம்: "பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதி இருக்கும். ஆனால், ஐ.நா பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பலரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட கடினமான கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது" என்று திங்கள்கிழமை இரவு நடந்த ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் விளக்கியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் திங்கள்கிழமை இரவு கூடிய நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை செயல்பாடுகள் குறித்த அனுபவம் வாய்ந்தவருமான சசி தரூர் அங்கு நடந்த ‘சோக யதார்த்தம்’ குறித்து விளக்கினார். பாதுகாப்பு குழு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை வைத்து பேசிய சசி தரூர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புக் குழு நிறைவேற்றாது என்று தெரிவித்தார்.